Monday, December 9, 2019

பூனே விஜயம்

போன மாதம் தமிழ் நாட்டுக்கு சென்று திரும்பிவரும்பொழுது என் பெற்றோரையும் பூனே-விற்கு அழைத்து வந்தோம். அவர்கள் பூனே இதுவரை வந்ததில்லை. என் கல்யாணத்திற்கு பிறகு முதன் முறை கூட்டி வருகிறோம்.

நாங்கள் வந்த நாளன்றே என் மாமியார் கர்நாடகா-விற்கு உறவினர் திருமணத்துக்கு போக வேண்டி இருந்தது. 'நாங்கள் வருகிறோம் என்று அவர்களை ஊருக்கு அனுப்புகிறீர்களா?' என்று என் அம்மா அப்பா இருவரும் என்னையும் என் மனைவியையும் கேட்டார்கள். எதேச்சையாக அமைந்தாலும் எனக்கு இது சௌகரியமாகவே தோன்றியது. மொழி தெரியாமல் என் பெற்றோர் என் மாமியாரிடமும், என் மாமியார் என் பெற்றோரிடமும் 10 நாட்கள் சமாளிப்பது, எனக்கு சாத்தியமாக தோன்ற வில்லை.

தமிழ் நாட்டில் புறப்படும்போதே என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. காய்ச்சலாக இருந்தது. முதல் முறையாக அம்மா விமானத்தில் பயணம் செய்தார்கள். விமானம் புறப்படுகையில் சிறு குழந்தை போல் அம்மா சாளரத்தினூடே  கட்டடங்களையும் மேகங்களையும் பார்ப்பதைப் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. பயணம் முழுவதும் அம்மா சாளரத்தையும் நான் அம்மாவையும் பார்த்து கொண்டு இருந்தோம். பயணம் முடிந்ததும் 'flight எப்படிம்மா இருந்துச்சு' என்று நான் ஆர்வத்துடன் கேட்டதற்கு 'நம்ம ஊரு town பஸ் மாதிரி இருந்துச்சு, ஊர்ல ராட்னம் சுத்தனா கூட கொஞ்சம் பயமா இருக்கும். இதுக்கு அது இதுனு ஏதோதோ சொன்னீங்க' என்று சகஜமாக கூறினார்கள்.

வீட்டில் நுழைந்த மறுவினாடியே என் அப்பா 'கண்ணு நமக்கு நம்ம கிராமம் தான் கண்ணு ஒத்து வரும். சிட்டி வாழ்க்கை எல்லாம் எனக்கு ஒத்தே வராது கண்ணு' என்றார். 'வந்து 2 நிமிடம் கூட ஆக வில்லை அதற்குள் இப்படி சொல்கிறாரே, எப்படி 10 நாட்கள் இங்கு கடத்தப் போறாரோ' என்று வியந்தேன். நான் வியந்த மாதிரியும் பயந்த மாதிரியுமே என் பெற்றோர்களின் 10 நாள் விஜயம் இருந்தது.

முதல் நாளே என் அப்பா அக்கம் பக்கம் உள்ள காய்கறி கடைகள், மளிகை சாமான் கடைகள் என்று அனைத்தையும் சுற்றி விட்டு வந்து 'என்ன கண்ணு இவ்ளோ விலை சொல்றானுங்க. எல்லாம் நம்ம ஊரை விட double மடங்கு கண்ணு. மிளகு 100gm 120 ரூபாய் சொல்றான் கண்ணு. நம்ம ஊர்ல 60 தான். பருப்பும் அதே மாதிரி தான். முருங்கைக்காய் 120 சொல்றான் கண்ணு. அப்டி எல்லாம் சாம்பார் சாப்பிடணும்னு ஒன்னும் அவசியமே இல்லன்னுட்டு பாரு கோவைக்காய் வாங்கிட்டு வந்துருக்கேன், அதுல அம்மாவ சாம்பார் வெக்க சொல்லிருக்கேன் சூப்பர்-ஆ இருக்கும்' என்று நகர விலைவாசி பற்றிப் புலம்பித் தள்ளினார். 'சொல்லிருந்தா 6 மாசத்துக்கு தேவையான மளிகை சாமான் எல்லாம் நம்ம ஊருல இருந்தே எடுத்துட்டு வந்துருக்கலாம்ல. அடுத்த வாட்டி train புக் பண்ணி எல்லாத்தையும் தூக்கிட்டு வந்திடனும்'-னு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.

அம்மாவின் காய்ச்சல் சரியான அடுத்த நாளே அப்பாவிற்கு உடல் நிலை மோசமானது. பூனேவின் குளிர் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. என் மனைவியிடம், 'என்னமா everything ஜில்லுமா இங்க. floor ஜில்லு , wall ஜில்லு , touch ஜில்லு' என்று ஆங்கிலத்தில் புலம்பிக்கொண்டு இருந்தார். உடல் நிலை மோசமானவுடன் வீட்டை மிகவும் இழந்தார் அப்பா. அவரது புலம்பல் அதிகமானது. 'என்ன கண்னு போர்வை மொத்தமாவே இல்ல?. சொல்லிருந்தா நம்ம வீட்டுல இருந்து 2 சோலாப்பூர் போர்வை எடுத்துட்டு வந்துருப்போம்ல', 'என்ன கண்ணு தளவாணி இவ்ளோ மொத்தமா இருக்கு? நம்ம வீட்டு தளவாணி எவ்ளோ சாஃப்ட்-ஆ இருக்கும், சொல்லிருந்தா 2 எடுத்துட்டே வந்து இருக்கலாம்ல' என்று கூறிக்கொண்டே போக, 'ஏது அடுத்த முறை ஒரு train கம்பார்ட்மெண்டே இல்ல புக் பண்ணனும் போல' என்று தோன்றியது.

2 நாட்களுக்கு பின் என் மனைவிக்கும் மேலும் 2 நாட்களுக்கு பின் எனக்கும் காய்ச்சல் வந்தது. வீடே ஹாஸ்பிடல் வார்டு போல ஆனது. பூனே வந்தும் கூட அம்மாதான் அனைவருக்கும் சமைப்பதும் வீட்டு வேலைகள் பார்ப்பதுமாக இருந்தார்கள். எனக்கு 2 நாட்களுக்கு மேலும் காய்ச்சல் சரி ஆகாமல் போகவும் என் அப்பா பயந்து விட்டார். அவருக்கு தெரிந்த அனைத்து டாக்டருக்கும் போன் பண்ணினார். அருகில் இருக்கும் டாக்டர்-ஐ போய் பார்க்கும் படியும் கண்டிப்பாக ஊசி கேட்டு போட்டுக்க வேண்டும் என்றும் அடம் பிடித்தார். நான் டாக்டர்-ஐ பார்க்க சென்ற பிறகு என் அம்மாவிடம் 'இங்க ஏதாவது ஒண்ணுன்னா இவனா பாத்துக்க யார் இருக்கா?' என்று கூறி அழுததாக பின் அம்மா என்னிடம் கூறினார்.

இங்கு இருந்த 10 நாட்களில் என் அம்மா செய்த ஒரே நல்ல விஷயம் 2 புத்தகங்கள் வாசித்தது தான். அவர்களுக்கு புத்தகங்கள் படிக்க ஆசை இருந்தாலும் எங்களுடைய வீட்டில் படிக்க நேரமே இருக்காது. 3 வேலையும் சமையல், வீட்டை சுத்தம் செய்வது, மளிகை கடையில் வியாபாரம் செய்வது என்றே பொழுது ஓடி விடும். ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவல் முடித்த பிறகு, நான் 'படிச்சு முடிச்சிட்டியா?' என்று கேட்டதற்கு 'ஓ!!!!' என்று தலையை ஒரு பக்கமா தூக்கி கண் சிமிட்டி புன்னகை செய்த போது கொள்ளை அழகு என் அம்மா. அவ்வளவு சந்தோசம் அம்மா கண்ணில். கண்ணிலே நிற்கிறது இன்னும். நான் படிக்க வாங்கி வந்த மத்த புத்தகங்களையும் அம்மாவிடமே கொடுத்து அனுப்பி இருக்கலாமோ என்று தோன்றுகிறது இப்போ. ஆனால் அங்கு சென்ற பிறகு அவர் படிப்பது அரிது தான்.

10 நாட்கள் கழித்து அம்மா அப்பா இருவரும் கிளம்பிய பொழுது அப்பா சற்றே தேறி இருந்தார். மீண்டும் பூனே வருவார்களா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சீக்கிரமா பெங்களூர் போய்  விட வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தாலும் சில காரணங்களால் அதற்கான  சாத்தியம் சற்று கடினமே. அப்பாவின் கவலையையும்  அம்மாவின் புன்னகையையும் மீண்டும் நினைத்துக்கொண்டேன்.

Tuesday, October 22, 2019

பழம்



கண்ணு, ஒரு பொண்ணு போட்டோ அனுப்பி இருக்கேன் watsapp-.பாத்தியா? என்று அவன் அப்பா அவனிடம் போன்-இல் கேட்டார்.

அவன் ஏற்கனவே போட்டோ-வை பார்த்து அவனுக்கு பெண்ணை பிடிக்க வில்லை. அப்பா கால் செய்தால் என்ன காரணம் கூறுவது என்று காலை- இருந்து நினைத்துக்கொண்டிருந்தான். அந்த போட்டோ, அந்த பெண்ணின் முழு உருவ புகைப்படம். புகைப்படத்தில் அந்த பெண் கருப்பாகவும் தோன்றவில்லை, குண்டாகவும் இல்லை, குள்ளையாகவும் இல்லை, நெட்டையாகவும் இல்லை. பெரும்பாலும் மேற்கண்ட ஏதாவது ஒரு காரணத்தை கூறி அதனால் பெண் பிடிக்க வில்லை என்று கூறுவான். ஆனால் இம்முறை அப்படி எளிதாக கூறிவிட முடியாது. புகைப்படத்திலிருந்த அந்தப்பெண் மாநிறம், உயரம் 5 அடி, 4 அங்குலம், மிக ஒல்லியும் இல்லை,குண்டும் இல்லை. பார்த்தவுடன் திரும்பி பார்க்கவைக்கும் பேரழகி என்றும் கூற முடியாது. அதனால் இம்முறை பிடிக்க வில்லை என்பதற்கு உள்ள எதுவும் பண்ணல, எந்த spark -உம் வரல,போட்டு தாக்கல, தலை கீழ போட்டு திருப்பல என்றெல்லாம் அப்பா-விடம் சினிமா வசனம் பேச முடியாது.

            காலையில் புகைப்படத்தை பார்த்த வுடன், ஆபீஸ்-இல் நண்பர்களிடம் காட்டி இது தான் அப்பா இன்னிக்கி அனுப்பிய பெண்ணின் போட்டோ, எனக்கு அவ்வளவாக பிடிக்க வில்லை, என்ன சொல்லி வீட்ல வேணாம்-னு சொல்ல போறேனோ தெரில என்று கூறினான்.
            நண்பர்களில் ஒருவன் “she is not bad மச்சி என்றான். மற்றொருவன் டேய், நம்ம மச்சானுக்கு not bad-லாம் எப்பிடிடா ஒத்து வரும். இவன் கிட்டத்திட்ட 6 அடி உயரம், நம்ம ஆபீஸ் பொண்ணுங்க எல்லாம் இவன் பாக்க Jayam Ravi மாதிரி இருக்கான், மாதவன் மாதிரி இருக்கான்-னு சொல்றாங்க. மச்சி, நீ சூப்பர் figure- வேணும்னு கேளு என்று நக்கலும் நையாண்டியுமாக கூறினான்.
அவன் பதிலுக்கு டேய், நான் அப்படி-லாம் ஒண்ணும் எதிர் பாக்கல, பாத்தா புடிக்கணும் அவ்ளோதான். நம்மகிட்ட போட்டோ ஒண்ண தான் காட்டுறாங்க, அப்புறம் வேற எத வெச்சி நாம முடிவு பண்ண முடியும்? போன்- பேசுறது கூட நிச்சயம் ஆனா தான் சாத்தியம். இப்போ இதே பொண்ணு கூட நான் கொஞ்ச நாள் பேசி பழகினா  எனக்கு புடிச்சாலும் புடிக்கலாம் , யாரு கண்டா? என்று கூறினான். 

         சரி டா, நீ புடிச்சு இருக்கா இல்லையா-னு முதல்ல சொல்லாத. ஜாதகம் எல்லாம் பாத்துட்டாங்களா-னு கேளு முதல்ல, இன்னும் இல்லனு அதுவே மேட்ச் ஆகாம ரிஜெக்ட் ஆக சான்ஸ் இருக்கு. அப்படி பாத்து எல்லாம் ஏற்கனவே மேட்ச் ஆயிடுச்சு-னா பொண்ணோட மத்த விவரம்-லாம் விசாரி, ‘என்ன படிச்சு இருக்கா?,வேளைக்கு போறாளா இல்லையா?, வயசு என்ன? எல்லாம் கேளு. எதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதுல, நீ வேணாம்-னு சொல்றதுக்கு என்று ஆறுதல் கூறினார்கள் அவனுடைய நண்பர்கள்.

           பின்பு நாள் முழுவதும் அவனுக்கு இதே நினைவாக இருந்தது. வேலை செய்யவே அவனுக்கு முடியவில்லை. அவ்வப்பொழுது அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் அந்த பெண்ணின் மீது எந்த ஒரு ஈடுபாடும் அவனுக்கு ஏற்படவில்லை. இதுவரை பல பெண்களை அவன் நிராகரித்ததுண்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லியதுண்டு. சில முறை இப்படியெல்லாம் காரணம் கூறி நிராகரிக்கிறோமே, நாம் என்ன மன்மதனா? என்ற குற்றவுணர்ச்சியும்
ஏற்பட்டதுண்டு. ஆனால் இது வாழ்க்கைப் பிரச்னை, தனக்கு பிடிக்காமல் கல்யாணம் செய்யவே கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.

         அவனுக்கு அனுப்பப்படும் பெண்ணின் புகைப்படங்கள் பெரும்பாலும் ஸ்டூடியோ-வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகவே இருக்கும். ஒரு நீல நிற பின்னணி, செயற்கையான சிரிப்பு, prayer-இல் நிர்ப்பது போல் attention-இல் ஒரு போஸ். இதைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் இப்படி இந்த பெண்களை பாடாய் படுத்திகிறார்களோ இந்தப் பெரியவர்கள்? என்று தோன்றும்.
        ஒரு சில புகைப்படங்களே சற்று இயல்பாகவும், யதேச்சையாகவும் இருக்கும். இவனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்த பொழுது, இவனுடைய பெற்றோர்கள் இவனைப் பாடாய் படுத்தியதும் ஒரு பெரும்கூத்து. ‘Facebook profile -இல் இருக்கும் ஏதாவது ஒரு photo-வை அனுப்புங்கள் என்று பல முறை இவன் சொல்லியும், இவன் பெற்றோர்கள் கேட்காமல் ஸ்டூடியோ-வில் முறையாக புகைப்படும் எடுத்து அனுப்புமாறு பிடிவாதமாக கூறினார்கள். அதுவும் ஒருமுறை அல்ல, பல முறை.
        
             இந்த சட்டை வேணாம், நல்ல டார்க்- கலர்- போட்டு எடு,தாடியோடு வேணாம், கிளீன் சேவ் பண்ணி எடு,’கை- வாட்ச் கட்டிக்கிட்டு எடு,நல்ல நேரம் பார்த்து அந்த நேரத்தில் எடு என்று பல முறை சித்தரவதை செய்து அவனை பொறுமையின் எல்லைக்கே தள்ளி அவன் கோபமாக இதற்கு மேல் போட்டோ எடுக்க சொன்னால், மூக்கில் பஞ்சை வைத்து தான் எடுத்து அனுப்புவேன் என்று கோபமாக கூறிய பிறகே அவர்கள் அடங்கினார்கள்.

    அவனுடைய அப்பா அவன் பதிலுக்காக காத்திருந்தார். சில வினாடி மௌனத்திற்கு பிறகு "பார்த்தேன்-பா" என்று மட்டும் கூறினான்.
"சரி. புடிச்சிருக்கா? இல்லையா?".
"ம்ம்ம்ம்ம் ...." என்று இழுத்தான்.
"இந்தாடி..நீயே கேளு  உன் மகன்கிட்ட" என்று கூறி அவன் அம்மாவிடம் போன்- கொடுத்தார் அப்பா.
"கண்ணு இந்த பொண்ணுக்கு என்ன கண்ணு குறைச்சல்?"என்று ஆரம்பித்தார் அம்மா. "லட்சணமா இருக்கு. நல்லா படிச்சிருக்கு, வேலைக்கு போகுது. ரொம்ப நல்ல பொண்ணு-னு எல்லாரும் சொல்றாங்க. இதை விட நல்ல வரன் கிடைக்காது கண்ணு".

என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான். சிறிது தயங்கி, "ஒரு 2 நாள் டைம் குடும்மா. யோசிச்சு சொல்றேன்" என்றான்.

"சரி கண்ணு. யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு" என்று அம்மா சொல்ல, அப்பா வெடுக்கென்று போன்- பிடுங்கி "டேய். இதை விட நல்ல பொண்ண-லாம் எங்களால பாக்க முடியாது. உனக்கென்ன உலக அழகி எல்லாம் கொண்டு வந்து இறக்கணுமா? நடைமுறை-க்கு ஒத்து வர மாதிரி யோசிச்சு முடிவெடு. இல்ல அங்க லவ் கிவ்வு பண்ணிக்கிட்டு திரியிரியா?" என்றார்.
"ச்ச ச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல பா"
"அந்த மாதிரி ஏதாவது ஐடியா இருந்தா இப்பவே மறந்துடு  புரியுதா? நம்ம குடும்பத்துக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் ஒத்தே வராது".
"சரிப்பா நான் 2 நாள்- சொல்றேன்".

3 நாட்கள் கழிந்தது. அவன் பெற்றோர்களிடம் பேசுவதை முடிந்த வரை தவிர்த்து வந்தான். நான்காம் நாள் அவனுடைய அம்மா மீண்டும் call செய்தாள். "என்னடா முடிவு பண்ணி இருக்க?" என்றாள்.

"வேலை- கொஞ்சம் busy-மா. இன்னும் நான் எந்த முடிவும் பண்ணல"-னு சொன்னான்.

"டேய் இன்னிக்கி அந்த பொன்னே எனக்கு call பண்ணுச்சு டா. 'முடிவு பண்ணிடீங்களா ஆண்ட்டி'-னு கேட்டா. நான் இன்னும் அவன் எதுவும் சொல்லல-மா , இன்னிக்கி கேட்டு கண்டிப்பா சொல்றேன்ன்னு சொன்னேன்" என்றாள் அவன் அம்மா.

"!! அப்புறம்" என்று அப்பாவியாய் கேட்டான்.

"என்னடா நொப்பறம்? அந்த பொண்ணு 'ஆண்ட்டி புடிக்கலைனா கூட சொல்லிடுங்க ஆண்ட்டி, தயங்க வேணாம். நிறைய பேர் சொல்றதுக்கு தயங்கிக்கிட்டு லேட் பண்ணுறாங்க . காத்திருக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.  ஆமா-வோ இல்லை-யோ உடனே சொல்லிட்டா அடுத்த வேலை-யா பாக்கலாம்'-னு சொன்னா. எனக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சு. எவ்வளவு மரியாதை-யா பேசினா தெரியுமா? நீ என்னடானா இன்னும் யோசிக்கிறேன் கீசிக்கிறேன்-ங்கிற"

"நான் நாளைக்கு கண்டிப்பா சொல்றேன் மா. இன்னிக்கி ஒரு நைட் டைம் கொடு" என்றான்.

பிறகு தன நண்பர்களுடன் மீண்டும் உரையாடினான். தன் அன்னை கூறியதையும் , அந்த பெண்ணே போன் செய்ததைப் பற்றியும் கூறினான். "பரிதாபப்பட்டு முடிவு செய்யற காரியம் இல்லடா கல்யாணம்", "உனக்கு புடிக்கலைனா don't overthink மச்சி", "டேய் இப்போ அவசரப்பட்டு ஓகே சொல்லிட்டு பின்னாடி வருத்தப்பட்டா 2 பேருக்கும் பெரிய கஷ்டம் தான்." என்று அனைவரும் அவரவர் கருத்துக்களை கூறினர் அவனிடம்.

அவன் இரவு முழுவதும் எவ்வளவோ சிந்தனை செய்து பார்த்தான். ஒரு சமயம் 'okay சொல்லிவிடலாம்' என்று கூட முடிவெடுத்தான். பல முறை அந்த பெண்ணின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தான். நேரில்  சந்தித்து  பேச அனுமதி கேட்கலாமா என்றும் யோசித்தான். அனால் நேரில் பார்த்தபின்பு பிடிக்கவில்லை என்று சொன்னால் அவன் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று பயந்தான்.

மறுநாள் காலை பிடிக்கவில்லை என்று அம்மா-விடம் கூறிய பின்பு சில மணி  நேரம் குற்ற உணர்வுடனே இருந்தான். நண்பர்கள் 'இதுக்கு ஏன்டா உம்-னு இருக்க? ஏதோ முதல் தடவை ஒரு பொண்ண வேண்டாம்-னு சொன்ன மாதிரி' என்று கேட்டார்கள். அது மேலும் அவன் குற்ற உணர்வை தூண்டியது. யாரையாவது காதலித்திருந்தால் இந்த பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்திருக்கும் என்று நினைத்தான். பெண்களிடம் பேசவே கூடாது என்று கேட்டு வளர்ந்தவன் காதல் எங்கு  செய்வது  என்று நினைத்து சங்கடப்பட்டுக்கொண்டான்.

அவன் பெற்றோர்கள் மீண்டும் பல வழிகளில் அவனுக்கு பெண் பார்ப்பதைத் தொடர்ந்தார்கள். அவன் studio-வில் எடுத்து அனுப்பிய புகைப்படம் மீண்டும் பல உரு எடுத்து பல இடங்களுக்கு பயணித்தது.

அப்படி பயணித்த ஒரு புகைப்படத்தை பார்த்த ஒரு பெண்ணின் தந்தை, தன் மகளை அழைத்து, "இந்த பையனை பாரம்மா. நல்ல handsome- இருக்கான்-", என்று கூறினார்.

அந்த பெண் அருகே வந்து அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்தாள். சில வினாடிகள் கூட உற்று பார்க்காமல், "போ ப்பா...பழம் மாதிரி இருக்கான் இவனை போய் handsome-ங்கிற", என்று கூறி விட்டு நொடியில் மறைந்தாள்.

அவளின் தந்தை மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு பெருமூச்சு விட்டார்.