Monday, December 9, 2019

பூனே விஜயம்

போன மாதம் தமிழ் நாட்டுக்கு சென்று திரும்பிவரும்பொழுது என் பெற்றோரையும் பூனே-விற்கு அழைத்து வந்தோம். அவர்கள் பூனே இதுவரை வந்ததில்லை. என் கல்யாணத்திற்கு பிறகு முதன் முறை கூட்டி வருகிறோம்.

நாங்கள் வந்த நாளன்றே என் மாமியார் கர்நாடகா-விற்கு உறவினர் திருமணத்துக்கு போக வேண்டி இருந்தது. 'நாங்கள் வருகிறோம் என்று அவர்களை ஊருக்கு அனுப்புகிறீர்களா?' என்று என் அம்மா அப்பா இருவரும் என்னையும் என் மனைவியையும் கேட்டார்கள். எதேச்சையாக அமைந்தாலும் எனக்கு இது சௌகரியமாகவே தோன்றியது. மொழி தெரியாமல் என் பெற்றோர் என் மாமியாரிடமும், என் மாமியார் என் பெற்றோரிடமும் 10 நாட்கள் சமாளிப்பது, எனக்கு சாத்தியமாக தோன்ற வில்லை.

தமிழ் நாட்டில் புறப்படும்போதே என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. காய்ச்சலாக இருந்தது. முதல் முறையாக அம்மா விமானத்தில் பயணம் செய்தார்கள். விமானம் புறப்படுகையில் சிறு குழந்தை போல் அம்மா சாளரத்தினூடே  கட்டடங்களையும் மேகங்களையும் பார்ப்பதைப் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. பயணம் முழுவதும் அம்மா சாளரத்தையும் நான் அம்மாவையும் பார்த்து கொண்டு இருந்தோம். பயணம் முடிந்ததும் 'flight எப்படிம்மா இருந்துச்சு' என்று நான் ஆர்வத்துடன் கேட்டதற்கு 'நம்ம ஊரு town பஸ் மாதிரி இருந்துச்சு, ஊர்ல ராட்னம் சுத்தனா கூட கொஞ்சம் பயமா இருக்கும். இதுக்கு அது இதுனு ஏதோதோ சொன்னீங்க' என்று சகஜமாக கூறினார்கள்.

வீட்டில் நுழைந்த மறுவினாடியே என் அப்பா 'கண்ணு நமக்கு நம்ம கிராமம் தான் கண்ணு ஒத்து வரும். சிட்டி வாழ்க்கை எல்லாம் எனக்கு ஒத்தே வராது கண்ணு' என்றார். 'வந்து 2 நிமிடம் கூட ஆக வில்லை அதற்குள் இப்படி சொல்கிறாரே, எப்படி 10 நாட்கள் இங்கு கடத்தப் போறாரோ' என்று வியந்தேன். நான் வியந்த மாதிரியும் பயந்த மாதிரியுமே என் பெற்றோர்களின் 10 நாள் விஜயம் இருந்தது.

முதல் நாளே என் அப்பா அக்கம் பக்கம் உள்ள காய்கறி கடைகள், மளிகை சாமான் கடைகள் என்று அனைத்தையும் சுற்றி விட்டு வந்து 'என்ன கண்ணு இவ்ளோ விலை சொல்றானுங்க. எல்லாம் நம்ம ஊரை விட double மடங்கு கண்ணு. மிளகு 100gm 120 ரூபாய் சொல்றான் கண்ணு. நம்ம ஊர்ல 60 தான். பருப்பும் அதே மாதிரி தான். முருங்கைக்காய் 120 சொல்றான் கண்ணு. அப்டி எல்லாம் சாம்பார் சாப்பிடணும்னு ஒன்னும் அவசியமே இல்லன்னுட்டு பாரு கோவைக்காய் வாங்கிட்டு வந்துருக்கேன், அதுல அம்மாவ சாம்பார் வெக்க சொல்லிருக்கேன் சூப்பர்-ஆ இருக்கும்' என்று நகர விலைவாசி பற்றிப் புலம்பித் தள்ளினார். 'சொல்லிருந்தா 6 மாசத்துக்கு தேவையான மளிகை சாமான் எல்லாம் நம்ம ஊருல இருந்தே எடுத்துட்டு வந்துருக்கலாம்ல. அடுத்த வாட்டி train புக் பண்ணி எல்லாத்தையும் தூக்கிட்டு வந்திடனும்'-னு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.

அம்மாவின் காய்ச்சல் சரியான அடுத்த நாளே அப்பாவிற்கு உடல் நிலை மோசமானது. பூனேவின் குளிர் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. என் மனைவியிடம், 'என்னமா everything ஜில்லுமா இங்க. floor ஜில்லு , wall ஜில்லு , touch ஜில்லு' என்று ஆங்கிலத்தில் புலம்பிக்கொண்டு இருந்தார். உடல் நிலை மோசமானவுடன் வீட்டை மிகவும் இழந்தார் அப்பா. அவரது புலம்பல் அதிகமானது. 'என்ன கண்னு போர்வை மொத்தமாவே இல்ல?. சொல்லிருந்தா நம்ம வீட்டுல இருந்து 2 சோலாப்பூர் போர்வை எடுத்துட்டு வந்துருப்போம்ல', 'என்ன கண்ணு தளவாணி இவ்ளோ மொத்தமா இருக்கு? நம்ம வீட்டு தளவாணி எவ்ளோ சாஃப்ட்-ஆ இருக்கும், சொல்லிருந்தா 2 எடுத்துட்டே வந்து இருக்கலாம்ல' என்று கூறிக்கொண்டே போக, 'ஏது அடுத்த முறை ஒரு train கம்பார்ட்மெண்டே இல்ல புக் பண்ணனும் போல' என்று தோன்றியது.

2 நாட்களுக்கு பின் என் மனைவிக்கும் மேலும் 2 நாட்களுக்கு பின் எனக்கும் காய்ச்சல் வந்தது. வீடே ஹாஸ்பிடல் வார்டு போல ஆனது. பூனே வந்தும் கூட அம்மாதான் அனைவருக்கும் சமைப்பதும் வீட்டு வேலைகள் பார்ப்பதுமாக இருந்தார்கள். எனக்கு 2 நாட்களுக்கு மேலும் காய்ச்சல் சரி ஆகாமல் போகவும் என் அப்பா பயந்து விட்டார். அவருக்கு தெரிந்த அனைத்து டாக்டருக்கும் போன் பண்ணினார். அருகில் இருக்கும் டாக்டர்-ஐ போய் பார்க்கும் படியும் கண்டிப்பாக ஊசி கேட்டு போட்டுக்க வேண்டும் என்றும் அடம் பிடித்தார். நான் டாக்டர்-ஐ பார்க்க சென்ற பிறகு என் அம்மாவிடம் 'இங்க ஏதாவது ஒண்ணுன்னா இவனா பாத்துக்க யார் இருக்கா?' என்று கூறி அழுததாக பின் அம்மா என்னிடம் கூறினார்.

இங்கு இருந்த 10 நாட்களில் என் அம்மா செய்த ஒரே நல்ல விஷயம் 2 புத்தகங்கள் வாசித்தது தான். அவர்களுக்கு புத்தகங்கள் படிக்க ஆசை இருந்தாலும் எங்களுடைய வீட்டில் படிக்க நேரமே இருக்காது. 3 வேலையும் சமையல், வீட்டை சுத்தம் செய்வது, மளிகை கடையில் வியாபாரம் செய்வது என்றே பொழுது ஓடி விடும். ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவல் முடித்த பிறகு, நான் 'படிச்சு முடிச்சிட்டியா?' என்று கேட்டதற்கு 'ஓ!!!!' என்று தலையை ஒரு பக்கமா தூக்கி கண் சிமிட்டி புன்னகை செய்த போது கொள்ளை அழகு என் அம்மா. அவ்வளவு சந்தோசம் அம்மா கண்ணில். கண்ணிலே நிற்கிறது இன்னும். நான் படிக்க வாங்கி வந்த மத்த புத்தகங்களையும் அம்மாவிடமே கொடுத்து அனுப்பி இருக்கலாமோ என்று தோன்றுகிறது இப்போ. ஆனால் அங்கு சென்ற பிறகு அவர் படிப்பது அரிது தான்.

10 நாட்கள் கழித்து அம்மா அப்பா இருவரும் கிளம்பிய பொழுது அப்பா சற்றே தேறி இருந்தார். மீண்டும் பூனே வருவார்களா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சீக்கிரமா பெங்களூர் போய்  விட வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தாலும் சில காரணங்களால் அதற்கான  சாத்தியம் சற்று கடினமே. அப்பாவின் கவலையையும்  அம்மாவின் புன்னகையையும் மீண்டும் நினைத்துக்கொண்டேன்.