Thursday, January 2, 2020

2019 புத்தகங்கள் - ஒரு பின்னோக்கம்

கடந்த 3 வருடங்களாக நான் புத்தகங்கள் படிப்பதற்காக goodreads இணையதளத்தில் எனக்கு நானே சவால் வைத்துக்கொள்வது வழக்கம். என் சோம்பேறித்தனத்தை கடந்து செல்லவே இப்படி ஒரு முயற்சி. 2019-ல் 40 புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று சவால் வைத்துக்கொண்டேன். அனால் வெறும் 23 மட்டுமே படிக்க முடிந்தது. அந்த 23 புத்தங்கள் பற்றி இதோ:

1. மூன்று நாள் சொர்க்கம் - சுஜாதா
   
ஆண்டு தொடங்கும்பொழுதே சீக்கிரமாக ஒரு புத்தகத்தை முடித்து எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்து சுஜாதா-வின் சிறிய குறுநாவல் 'மூன்று நாள் சொர்க்கம்' படித்து முடித்தேன். சுஜாதா-வின் மற்ற குறுநாவல்களை விட இது  சற்று சுமார் என்றே சொல்ல முடியும்.

2. Rip Van Winkle - Washington Irving

ஒரு புத்தக வாசிப்பாளர்கள் வலைப்பதிவின் மூலம் 'Rip Van Winkle' என்ற அமெரிக்க சிறு கதைப் பற்றி அறிந்தேன். அமெரிக்க சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தில் ஒரு மனிதன் மர்மமான மலைப்பகுதி ஒன்றில் 20 வருடங்கில் தூங்கிவிடுகிறான். பின் அவன் கண் விழிக்கையில் அமெரிக்க சுதந்திரம் அடைந்து பல மாற்றங்கள் கண்டு விடுகிறது. அந்த கால மற்றும் கலாச்சார மாற்றத்தை சற்றே நகைச்சுவையோடு கூறிய ஒரு கற்பனை கதை.


3. மீண்டும் ஜீனோ - சுஜாதா

சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' படித்த பிறகு, 1980-களில் இப்படி ஒரு அறிவியல் புனைக்கதையை எப்படி எழுதினார் என்று நினைத்து வியந்தேன். அதனுடைய தொடர் நாவலான 'மீண்டும் ஜீனோ' என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே அமைந்தது. ஜீனோ என்கிற எந்திர நாய் நிச்சயமாக  உங்கள் உள்ளங்களை கவர்ந்து விடும்.


4. The Alienist - Caleb Carr

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடக்கின்ற கோரமான தொடர் கொலைகள் பற்றிய திரில்லர் நாவல். மிகவும் சிக்கலான, இடர்ப்பாடுகள் மிகுந்த நாவல். திரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், சற்று மன உறுதியுடன் படித்தால்.

5. வந்தார்கள் வென்றார்கள் - மதன்

11-ஆம் நூற்றாண்டில் தொடங்கி முகலாய ராஜாங்கம் வரை, டெல்லி மீது படையெடுத்த அதனை வெளிநாட்டவர்கள் பற்றியும், அவரகள் செய்த கொடும்போர், ஆட்சி முறைகள், உட்பூசல்கள் என்று அனைத்தையும் ஸ்வாரஸ்யத்துடன் 200 பக்கங்களுக்குள் சொல்லி இருக்கிறார் மதன். இந்திய வரலாறு மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு விறுவிறுப்பான வாசிப்பாக அமையும்.

6. The Ramayana - R K Narayan

இராமாயணத்தை சுருக்கமாகவும் எளிமையாகவும் எடுத்துக் கூறி இருக்கிறார் ஆர். கே. நாராயன். இராமாயணம் பற்றி அறியாதவர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

7. Manto 'Selected Short Stories' - Saadat Hasan Manto

இந்திய/பாகிஸ்தான் எழுத்தாளர் மண்டோ-வின் சிறுகதைத் தொகுப்பு இது. 2019-ல்  நான் படித்ததில் மிகச்சிறந்த புத்தகம் இது என்றால் மிகை ஆகாது. மண்டோ-வின் ரசிகனாக ஆகி விட்டேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின் போது நடந்த வன்முறைகள், கற்பழிப்புகள், கொலைகள் பற்றி பல சிறுகதைகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தான், இந்து முஸ்லீம் என்று எந்தவொரு பிரிவினருக்கும் வக்காலத்து வாங்காமல், அந்த பிரிவு சாமான்ய மக்களை எப்படி பாதித்தது என்று மக்களின் கண் வழியாகவே கதைகள் அமைந்துள்ளன. ஒரு சிறுகதை இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? இவ்வளவு வலிகளையும் காயங்களையும் விவரிக்க முடியுமா? என்று பல கதைகள் என்னை வியக்க வைத்தன.

8. Three Women - Rabindranath Tagore

ரபீந்திரநாத் தாகூர்-இன் 3 குறு நாவல்களின் தொகுப்பு. மூன்றும் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்டவை. மூன்றில் எனக்கு பிடித்தமான கதை 'The Broken Nest'. சத்தியஜித் ரே-வால் 'சாருலதா' என்ற பெயரில் படமாக்கப் பட்டு மிகுந்த வரவேற்பும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

9. ஹாய் மதன் - பாகம் - 2 - மதன்

கேள்வி பதில் புத்தகங்கள் பெரும்பாலும் காலத்தை கடக்க மட்டுமே உதவுகின்றன. எந்த கேள்வியும் பதிலும் மனதில் நிற்பதில்லை. அதனால் என்னுடைய சவாலில் ஒரு எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள மட்டுமே இதை படித்தேன் என்று குற்ற உணர்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

10. The Mahabharatha - R K Narayan

மகாபாரதம் எளிமையாகவும், சுருக்கமாகவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மகாபாரதம் பற்றி நான் ஏற்கனவே நிறைய படித்திருந்ததால், இதில் புதிதாக எதுவும் இல்லை.

11. Conversations with Mani Ratnam - Baradwaj Rangan

இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது என்பதே எனக்கு தெரிந்திருக்க வில்லை. எதேச்சையாக நூலகத்தில் உலாவிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்டது. பார்த்த உடனே எனக்கு தெரியும் நான் இதை 2 நாட்களில் படித்து முடித்து விடுவேன் என்று. மணிரத்னம் படங்களின் ரசிகர்களுக்கு இது ஒரு தேநீர் விருந்து போல.

12. Animal Farm - George Orwell

ரஷ்யப் புரட்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட நையாண்டியான நாவல். மிருகங்களை வைத்து நையாண்டித்தனமாக அமைந்திருந்தாலும், புரட்சி, போரட்டம், தலைவர்கள், தொண்டர்கள், பதவி, சுரண்டல்கள் என்று அணைத்து அரசியல் அம்சங்களைப் பற்றியும் சிந்திக்க வைக்கும் புத்தகம்.

13. The Name of the Rose - Umberto Eco

இத்தாலிய இலக்கியத்தில் பெரிதும் போற்றப்படும் புத்தகம் இது. 14-ஆம் நூற்றாண்டில் ஒரு கிறிஸ்தவ சர்ச்-ல் நடக்கும் மர்ம கொலைகளை பற்றிய நாவல். மேல்நோக்காக பார்க்கையில், ஒரு திரில்லர் நாவல் எனப்பட்டாலும், இந்த புத்தகத்தில் பல விஷயங்கள் குறித்து பேசப்படுகின்றன. 14-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாறு, அன்றைய மன்னர்களுக்கும் கத்தோலிக்க சர்ச்-இன் போப்-க்கும் இடையே இருந்த கருத்து  வேறுபாடுகள், பைபிள்-இல் கூறப்பட்ட கதைகளின் உள் அர்த்தங்கள், அதை எப்படி பல்வேறு குழுவினர் பல்வேறு விதமாக புரிந்து கொண்டார்கள், அப்படி புரிந்து கொண்டதால் கிறிஸ்தவ மதத்தில் ஏற்பட்ட பிளவுகள் என்ற பல அடுக்குகளில் கதைக்களம் அமைந்திருந்தது. பைபிள், ஐரோப்பிய வரலாறு பற்றி எனக்கு முன்னறிவு ஏதும் எனக்கு இல்லாததால் இதை படிப்பதற்கு சற்று சிரமமாகவே இருந்தது.

14. Shikhandi and Other Tales - Devdutt Pattanaik

அம்பை-யாக பிறந்து பீஷமரை கொள்வதாக சபதம் செய்து, மறுபிறவியில் திருநங்கையாக சிகண்டி(னி) என்ற பெயரில் பிறந்து பீஷ்மரின் இறப்புக்கு காரணமாக இருந்த கதையோடு, மற்ற பல புதிரான, விந்தையான, ஆண்-பெண் பாலின உறவுகள், மாற்றங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்.மகாபாரதம் மட்டுமன்றி, மற்ற புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புற கதைகள் என்று பலவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகள், கட்டுரைகள் கொண்ட புத்தகம்.

15. Maharani - Ruskin Bond

வாழ்ந்து கெட்ட ராஜாங்கத்தின் கடைசி மகாராணி-யின் கடைசி நாட்கள் குறித்தும், அவருடனும், அவரது குடுமபத்தினருடனும்  எழுத்தாளர் கொண்ட நட்பு குறித்தும் எழுதப்பட்ட நாவல். ரஸ்கின் பாண்ட்-இன் மற்ற புத்தகங்கள் போலவே முசூரி மலைப்பகுதியில் நடக்கும் கதை.

16. The City of Brass - S A Chakraborthy

அலாவுதீன், அலி பாபா கதைகளில் நாம் பார்த்த பூதங்களுக்கு வேறு ஒரு பரிமாணம் அளித்து அவர்களின் வரலாறு, மந்திர தந்திரங்கள், போர்கள் என்று ஒரு கற்பனை உலகை படைத்து அதில் ஒரு பெண்ணை முதன்மைப் பாத்திரமாக வைத்து எழுதியுள்ளார் பெண் எழுத்தாளர் ஷான்னோன் சக்ரபர்த்தி.

17. ஜெயகாந்தன் சிறுகதைகள் - ஜெயகாந்தன்

10 கதைகள் கொண்ட தொகுப்பு. ஆனால் ஜெயகாந்தனின் சிறந்த படைப்புகள் இதில் இருந்ததாக தெரிய வில்லை. சில கதைகள் காலம் கடந்து விட்டதால் சாதாரணமாக தெரிந்ததோ என்னவோ.

18. முதற்கனல் - ஜெயமோகன்

மீண்டும் மஹாபாரதம். பல்வேறு எழுத்தாளர்கள் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் எழுதி இருக்க, அணைத்து கதாபாத்திரங்குளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முழு மகாபாரதத்தையும் 'வெண்முரசு' என்கிற நாவல் வடிவமாக எழுதிக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். அதன் முதல் புத்தகம் தன் 'முதற்கனல்'. தற்போது 23-வது புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறன். அணைத்து புத்தகங்களும் இலவசமாக அவருடைய இணையதளத்தில் உள்ளன.
'முதற்கனல்' அற்புதமான ஆரம்பம். அடுத்தடுத்த புத்தகங்களை படிக்க ஆர்வமாக உள்ளேன்.

19. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்-இன் மைல்கல் என்று சொல்லலாமா இந்த நூலை? அல்லது தமிழ் நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று சொல்லாமா? கங்கா என்கிற கதாபாத்திரத்தை அவர் எப்படி எழுதினார் என்பது பெரும் வியப்பு. ஒரு ஆண் எழுத்தாளர் எப்படி ஒரு பெண் பாத்திரத்தை இந்த அளவுக்கு எழுத முடியும் என்று இன்றும் பலரும் வியந்து கொண்டிருக்கிறார்கள். சேலம் அஜந்தா புக் சென்டர்-இல் இதை வாங்கியபோது, இன்றும் இந்த புத்தகத்திற்கு நிறைய கிராக்கி இருப்பதாக கேள்விப்பட்டு வியந்தேன்.

20. கி. மு கி. பி - மதன்

கற்கால மனிதன் முதல் சந்திரகுப்தா/சாணக்யா வரை உள்ள வரலாற்றை  மதன் மீண்டும் 200 பக்கங்களுக்குள் ஸ்வாரசியம் குறையாமல் கூறி இருக்கிறார். வரலாற்று ரசிகர்கள் தவற விடக்கூடாத புத்தகம்.

21. துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்-இன் கட்டுரைத் தொகுப்பு. அவரின் வினோதமான அனுபவங்கள், அந்நியர்களிடம் அவர் காட்டும் நம்பிக்கை, தனக்கு பாராட்டுக்கடிதம் எழுதியவனை நேரில் சென்று சந்தித்தது போலவே தனக்கு கொலை மிரட்டல் கடிதம் எழுதியவனையும்  நேரில் சென்று பார்த்து நட்பு பாராட்டிக்கொள்வது , கழுதையை பார்ப்பதற்கு சென்னை முழுக்க தன் மகனுடன் அலைவது என்று புத்தகம் முழுவதும் வியக்க வைக்கும் அனுபவங்கள். என்னை பயணம் செய்யவும், அந்நியர்களிடம் பேசவும் தூண்டிய புத்தகம். இன்னும் நான் பேசவில்லை என்பது என் இயலாமை :(


22. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா

ஆர். கே. நாராயன்-இன் மால்குடி கதைகள் போல சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து சிறுகதைகள். அந்த சிறு நகரில் சிறுவனாய் அவர் பார்த்த மனிதர்கள், பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட்டு, எதிர் வீட்டு பெண்கள், என்று நம்மை நம் பள்ளி காலத்திற்கு இழுத்துச் செல்லும் கதைகள்.

23. மனிதனும் மர்மங்களும் - மதன்

வரலாறை போலவே, இந்த புத்தகத்தில் மனிதனுக்கு புரிபடாத, மர்மமான ஆவிகள், வேற்று கிரஹ வாசிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் என்று நான் கேள்விப்படாத பல மனிதர்கள், நிகழ்வுகள் பற்றி மதன் அவருடைய நடையில் விவரித்துள்ளார்.

2020-இல் மேலும் பல புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று எத்தனித்துள்ளேன். நீங்கள் படித்தவை மற்றும் பிடித்தவை பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய புத்தக அலமாரியில் இடம் ஒதுக்கிக் கொள்கிறேன்.