Saturday, June 20, 2020

படித்ததில் பாதித்தது - விரும்பிக் கேட்டவள்


    ஊரடங்கில் பொழுதைப் போக்குவதற்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் 'சென்னையும் நானும்' தொடரை கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு எபிசொட்-இல் அவர் எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு, பாடகர் பி. பி. ஸ்ரீனிவாஸ் அவரை மிகவும் பாராட்டியதைப் பற்றிக் கூறி இருந்தார். அந்தச் சிறுகதையின் தலைப்பு 'விரும்பிக் கேட்டவள்'. தன் வாழ்நாள் முழுவதும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களை நாள் தோறும் கேட்டுக் கழித்த ஒரு பெண் தன் சாகும் தருவாயிலும் அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டே இறப்பது தான் அந்தக் கதை என்று ஒரு வரியில் கூறி இருந்தார்.அந்தக் கதையைப் படமாக எடுக்கவும் பி.பி.ஸ்ரீனிவாஸ் முயற்சி செய்ததாகவும் கூறி இருந்தார்.

    கதையை ஒரு வரியில் கேட்டபோதே அது என்னுடைய ஆர்வத்தைத் தூண்டியது. ஒரு கலைஞனுக்கு ரசிகராக இருக்கலாம், தீவிர ரசிகராகக் கூட இருக்கலாம். 'ஆனால் வாழ்நாள் முழுவதும் ஒரு பாடகனையும் அவன் குரலையும் தன் வாழ்வில் ஒரு அங்கமாக இணைத்து ஒருவர் வாழ முடியுமா? அதைக் கதையாக எழுதினாலும் அது எந்த அளவிற்கு நம்மில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?' என்று எனக்கு ஒரே விந்தையாக இருந்தது.

    உடனே அந்தக் கதையை இன்டர்நெட்-இல் தேடிப் படித்தேன். சிறு வயதில் இருந்து பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களையே கேட்டு வளர்ந்த, வாழ்ந்த 'வசந்தி சித்தி'-யின் கதை அது. கதை 5-6 பக்கங்கள் தான். நீங்களும் தேடிப் படிக்கலாம். படித்து முடித்தவுடன் அழுகை என் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது. வெறும் 6 பக்கங்களிலே 'வசந்தி சித்தி'-யை விட்டுப் பிரிய எனக்கு மனம் இல்லை. சினிமா பாடல்கள் நம் வாழ்வில் எப்படி ஒரு முக்கியத்துவத்தை அடைந்துள்ளது என்பதை மிக எளிய ஆனால் மனதைத் தொடுகிற வார்த்தைகளில்  விவரித்திருந்தார் ராமகிருஷ்ணன் அவர்கள்.

    அந்தக் கதையின் மையமாக அமைந்த பாடல், 'கொடி மலர்' படத்தில் வந்த 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்' என்ற பாடல். அந்தப் பாடலை நான் அதற்கு முன்பு கேட்டதில்லை. கதையைப் படித்து முடித்தவுடன் அந்தப் பாடலைத் தேடிக் கேட்டேன். கண்ணதாசன் வரிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் அந்தப் பாட்டு மிக ரம்யமாக இருந்தது. இந்தப் பாடலை எப்படி நான் இவ்வளவு நாள் கேட்காமல் இருந்தேன் என்று ஆச்சர்யமாக இருந்தது. என் தலைமுறை மக்களுக்கு சிவாஜி, எம். ஜீ. ஆர் பாடல்கள் தெரிந்திருந்தாலே அதிசயம் தானே? முத்துராமன் கதாநாயகனாக நடித்திருந்ததால் பெரிதாக தெரிய வில்லை போலும்.

    பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தேன். நான் சில பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களை கேட்டு இருந்தாலும் இந்த பாடல் அவர் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தியது. சிலமுறை கேட்ட பிறகு மீண்டும் அந்தச் சிறுகதையைப் படித்தேன். இம்முறை அழுகையை அடக்க முடியவில்லை. முக்கியமாக சில வரிகள் என் நெஞ்சைப் பிசைந்தது. அந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். சில மணி நேரங்கள் அந்தப் பாடலையும் அந்தச் சிறுகதையையும் மாற்றி மாற்றிக் கேட்டும் படித்துக் கொண்டும் இருந்தேன்.

    நம் வாழ்வில் பாடல்கள் அனைத்துத் தருணங்களிலும் துணை நிற்கின்றன. சந்தோசமாக இருக்கும் போது பாடல்களைக் கேட்டு மேலும் களிப்படைகிறோம், சோகமாக இருக்கும்போது பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைகிறோம், சலிப்படையும் பொழுது பாடல்கள் கேட்டு பொழுதைப் போக்குகின்றோம். ஒவ்வொருவருக்கும் ஏதோ சில பாடல்களோ, ஏதோ ஒரு பாடகரின் குரலோ அல்ல ஏதோ ஒரு இசைக்கலைஞனின் இசையோ பிடித்திருக்கிறது. பாடல்கள் நம்முடைய சில நேரங்கள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. சில நேரங்களில் நமது வாழ்வின் சில அனுபவங்களைப் பாடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. பிறகு அந்தப் பாடலைக் கேட்கும் பொழுது அந்த அனுபவங்கள் மீண்டும் நம் நினைவில் படர்கின்றன.

    'ஒரு கலைஞனின் படைப்பு, கூட்டத்தில் எறிந்த அம்பு போல, அது யாரை எப்போது தாக்கும் என்று கூற முடியாது' என்று எங்கோ படித்த ஞாபகம். அப்படி பி.பி.ஸ்ரீனிவாஸ்-இன் குரல் 'வசந்தி சித்தி'-யை தாக்கியுள்ளது. அதே போல் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்து என்னையும் தாக்கியுள்ளது. இனி 'மௌனமே பார்வையால்' பாட்டைக் கேட்டால் என்னால் 'வசந்தி சித்தி'-யை நினைக்காமல் இருக்க முடியாது.