ஊரடங்கு ஏப்ரல் மாத இறுதி வரை நீடிக்கப் பட்டுவிட்டது. தமிழ் படிப்பதற்கான காலமும் ஆர்வமும் கூடவே அதிகரித்து விட்டது. பல வருடங்களுக்கு முன் வாங்கி வைத்திருந்த '401 காதல் கவிதைகள் - குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்', சுஜாதா-வால் எழுதப்பட்ட புத்தகம் அலமாரியில் இருந்து 'இப்பொழுது கூட என்னைப் படிக்காவிட்டால் வேறு எப்பொழுது படிக்கப் போகிறாய்' என்று கூறுவது போல் தோன்றியது. அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். குறுந்தொகை கவிதைகளுக்கு சுஜாதா எளிய விளக்கவுரை அளித்திருந்தார்.
அதில் இரண்டாவது கவிதையின் முதல் வரியே என் கவனத்தை ஈர்த்தது. 'கொங்கு தேர் வாழ்க்கை' என்று அந்த வரிகள் ஆரம்பித்தன. இதை எங்கேயோ ஏற்கனவே கேட்டது போல் தோன்றியது எனக்கு. ஒரு வேலை பள்ளி நாட்களில் படித்திருப்பேனோ என்று நினைத்தேன். பள்ளியில் படித்த தமிழ் இன்னும் நமக்கு நினைவிருக்கிறதே என்று என் மூளையின் ஞாபக சக்தியை நினைத்து மெச்சினேன்.
அந்த கவிதையின் விளக்கத்தைப் படித்த போது தான், அது எங்கிருந்து எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று உணர்ந்தேன். திருவிளையாடல் படத்தில் செண்பக பாண்டியன் சந்தேகத்தைத் தீர்க்க சிவன் எழுதிய பாடல். சிவாஜி வேகமாய் இந்த பாடலை கூறியதில் 'கொங்கு தேர் வாழ்க்கை' மட்டும் தான் என் மனதில் படிந்திருந்தது. நான் அடிக்கடி விரும்பி பார்க்கும் காட்சி அது. தருமி தனியே புலம்புவது முதல் சிவன் நக்கீரனை எரிக்கும் வரை நகைச்சுவை, நடிப்பு, சிவாஜி யின் தமிழ் உச்சரிப்பு, சிவனுக்கும் நக்கீரனுக்கு வாக்குவாதம் என்று பல தொனிகள் மாரி சிவன்(சிவாஜி) 'நக்கீரா' என்று கர்ஜிக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் எனக்கு மயிர்கூச்செறிதல் உண்டாக்கும் காட்சி அது.
அந்தப் பாடல்:
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.
சிவாஜி கூறிய விளக்கம் நமக்கு புரியுமே தவிர அந்தப் பாட்டை தெரிந்து கொள்ள எத்தனை பேர் முயற்சித்திருப்போம் என்று தெரியாது. இங்கு எதேச்சையாக குறுந்தொகையில் இரண்டாம் பாடலே அது தான். இப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம். திருவிளையாடல் படம் பரஞ்சோதி முனிவர் 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'திருவிளையாடல் புராணம்' என்ற நூலில் இருந்து தழுவப்பட்டதாகும். அதில் கூறி இருக்கும் 64 கதைகளில் வெறும் நான்கு மட்டும் தான் படமாக்கப்பட்டது.
16-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலில் குறுந்தொகையில் உள்ள பாடல்குறிப்பிடப்பட்டதா? அல்லது திருவிளையாடல் படத்திற்காக A.P. நாகராஜன் அவர்கள் குறுந்தொகையில் உள்ள பாட்டை உபயோகப் படுத்திக் கொண்டாரா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. சரி அதையும் தான் தேடிப் பார்த்துவிடுவோமே என்று தேடினேன். ரொம்ப நேரம் ஆகவில்லை, திருவிளையாடல் புராணம் முழுவதும் இணையதளத்தில் கிடைத்தது. அதில் சற்று பொறுமையாக தேடியதில் கீழ்க்கண்டவற்றை கண்டறிந்தேன்:
தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் வரும் பாடல்:
தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்த்து அவன் இறைஞ்சி வாங்கினான்.
ஆம். திருவிளையாடல் புராணத்தில் 'கொங்கு தேர் வாழ்க்கை' பாடலை சிவன் தருமிக்கு அளித்ததாக கூறப்பட்டிருக்கிறது. குறுந்தொகையில் இந்தப் பாடலை எழுதியவர் பெயர் என்ன தெரியுமா? 'இறையனார்'.
சிவனுக்கும் கீரனுக்கும் அமைந்த வாக்குவாதம் முழுவதும் இந்த நூலில் இருக்கிறதா என்று தேடினேன். அதன் விளவு இதோ:
ஆரவை குறுகி நேர் நின்று அங்கு இருந்தவரை நோக்கி
யாரை நங் கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா முன்னம்
கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற
சீரணி புலவன் குற்றம் யாது எனத் தேராக் கீரன்.
சொல் குற்றம் இன்று வேறு பொருள் குற்றம் என்றான் தூய
பொன் குற்ற வேணி அண்ணல் பொருள் குற்றம் என்னை என்றான்
தன் குற்றம் வருவது ஓரான் புனைமல்ர்ச் சார்பால் அன்றி
அல் குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்.
பங்கய முக மென் கொங்கைப் பதுமினி குழலோ என்ன
அங்கு அதும் அனைத்தே என்றான் ஆலவாய் உடையான் தெய்வ
மங்கையர் குழலோ என்ன அன்னதும் மந்தாரத்தின்
கொங்கலர் அளைந்து நாரும் கொள்கையால் செய்கைத்து என்றான்.
பரவி நீ வழிபட்டு ஏத்தும் பரம் சுடர் திருக்காளத்தி
அரவு நீர்ச் சடையார் பாகத்து அமர்ந்த ஞானப் பூங்கோதை
இரவி நீர்ங் குழலும் அற்றோ என அ•தும் அற்றே என்னா
வெருவிலான் சலமே உற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்.
கற்றை வார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல் ஆகம்
முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்.
தேய்ந்த நாள் மதிக் கண்ணியான் நுதல் விழிச் செம் தீப்
பாய்ந்த வெம்மையில் பொறாது பொன் பங்கயத் தடத்துள்
ஆய்ந்த நாவலன் போய் விழுந்து ஆய்ந்தனன் அவனைக்
காய்ந்த நாவலன் இம் எனத் திரு உருக் கரந்தான்.
சிவாஜி உள்ளே வந்து 'என் பாட்டிற்கு குற்றம் கூறியவன் எவன்?' என்று கேட்பதில் இருந்து 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் வரையில் அனைத்து வசனங்களும் இந்த பாடல்களில் இருந்தே எழுதப் பட்டிருக்கின்றன. எனக்கு பாடல்கள் அனைத்தும் புரியவில்லை என்றாலும் வசனங்கள் தெரிந்திருந்ததால் எனக்கு புரிந்தவற்றை உயர்த்திக் காட்டியுள்ளேன்.
ஆனால் அதன் பிறகு நடக்கும் வாக்குவாதம், அதாவது சிவன் கீரனைப் பார்த்து 'கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்' என்று கூறுவது(மயிர்கூச்செரியும் தருணம்) இங்கே இல்லை. அந்த வசனம்:
சிவன்(சிவாஜி):
அங்கம் புழுதிபட அரிவாளில் நெய் பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி - சங்கதனை
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன் ?
கீரன்(APN):
சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கு ஏது குலம்? - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம்போல்
இரந்துண்டு வாழ்வதில்லை!!!
இதற்குப் பிறகு தான் நக்கீரா!!! என்று கர்ஜித்து சிவன் கீரனை எரிப்பார். இந்த வசனத்தை திரைப் படத்திற்காக எழுதினார்களா? அல்லது இதுவும் இலக்கியத்தில் இருக்கும் பதிவா? என்று மற்றுமொரு சந்தேகம் எழுந்தது. மீண்டும் தேடினேன். ஆம் இலக்கியத்தில் இருக்கும் பதிவு தான் இதுவும். தவிர இந்த வசனத்திற்கும் பொருள் இது வரை தெரியாது. இப்போதுதான் அதையும் அறிந்து கொண்டேன்.
'தனிப்பாடல் திரட்டு' என்ற ஒரு தொகுப்பு நூலில் இந்த பாடல்கள் அமைந்துள்ளது. அந்த பாடல்கள் இதோ:
அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்
சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரர்க்கு அங்கு எதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வோம் ...
இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால், 'சங்கை அரிந்து அதிலிருந்து வளையல் செய்யும் குலத்தைச் சேர்ந்த கீரன் என் பாடலை பிழை என்று சொல்வதா' என்று சிவன் கேட்கிறார். 'சங்கை அரிந்து வளையல் செய்யும் குலம் எங்கள் குலம் , அந்த சங்கில் பிச்சை எடுத்து வாழ்பவர் சிவனாகிய நீர்' என்று கீரன் கூற சிவன் கோவப்பட்டு எரிப்பதாக படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து நான் அறிந்தது, அந்த ஒரு காட்சிக்காக எவ்வளவு ஆராய்ச்சிகள் அந்தப் படத்தின் வசனகர்த்தா செய்துள்ளார் என்பது ஒன்று. மற்றொன்று சங்கை அறுத்து வளையல் செய்யும் குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கவி பாடுவதில் வல்லவராக இருந்த நக்கீரரை எந்தப் பாகுபாடின்றி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக நியமித்துள்ளனர் பாண்டிய மன்னர்கள் என்பது. சங்க காலத்தில் பிறந்த குலத்திற்கும் அடையும் பதவிக்கும் சம்மந்தம் இருந்திருக்க வில்லை என்று இதன் மூலம் நாம் நம்பலாமா?
இவ்வளவு காலம் எனக்கு பிடித்த ஒரு காட்சி, நூற்றுக்கும் மேற்பட்டு நான் கண்டும் கேட்டும் வியந்த காட்சிக்குள் இவ்வளவு தகவல்கள் இருப்பது தெரியாமல் இருந்திருக்கிறதே என்று வியப்பாக உள்ளது. உங்களில் பலருக்கும் இந்த விவரங்கள் புதுமையாக இருக்குமாயின் இது ஸ்வாரஸ்யமான தகவலாக விளங்கும் என்று நம்புகிறேன்.