Monday, July 6, 2020

படித்ததில் பாதித்தது - தடயங்களைத் தேடி...

    சில வருடங்களுக்கு முன் நான் அமெரிக்கா-வில் வசித்துக் கொண்டிருந்தபொழுது ஒரு வார இறுதியில் பொழுதைக் கழிப்பதற்காக அருகாமையில் சுற்றிப் பார்க்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று தேடி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தைப் பார்க்கச் சென்றேன். வரலாற்று சிறப்பு என்றால் மிஞ்சிப்போனால் 200 வருடங்களுக்கு முன் கட்டிய ஒரு வீடு,  அவ்வளவு தான். யாரோ அந்த ஊர் மேயர் வசித்த இடமாம், அவர் உபயோகித்த நாற்காலிகள், உணவருந்தும் மேஜை, நூலகம், சிம்னி விளக்குகள் என்று அனைத்தையும் அதே இடத்தில் வைத்து, பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நபருக்கு 10 டாலர் வீதம் வசூலித்தனர். அதைக் கண்டபோது எனக்கு வியப்பாக இருந்தது. 'நம்ம ஊரில் கிராமங்களில் உள்ள பழைய பண்ணையார், சமீன்தார் வீடுகள் கூட இதை விட அழகாக இருக்குமே, இந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இதைப் பார்ப்பதற்கு 10 டாலர் வேறு வசூலிக்கிறார்கள்' என்று சப்பு தட்டிக் கொண்டிருந்தேன்.அதே சமயம், 'சில நூறு வருடங்கள்தான் பழமை என்றாலும் இதை ஒரு பொக்கிஷமாகக் கருதி இன்றும் நன்றாக பராமரித்து வருகிறார்களே' என்று வியக்கவும் செய்தேன்.

    நம் நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்து இன்றும் அற்புதமாய் இருக்கும் பல கோவில்கள், கோட்டைகள் மற்றும் பல தொன்மையான படைப்புகள் பராமரிப்பின்றி இருப்பதை நினைத்து வருந்தினேன். பராமரிப்பது இருக்கட்டும், முதலில் எத்தனை பேருக்கு நம்மைச் சுற்றி இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களைப் பற்றியோ, அங்கு உள்ள கல்வெட்டுகளைப் பற்றியோ தெரியும்? அந்தக் கோவில்களை கட்டியது யார்? அங்கு கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டிருக்கும் தகவல்கள் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்?அதன் பெருமைகள் தெரிந்தால் தானே அதைப் போற்றிப் பராமரித்துப் பாதுகாக்கத் தோன்றும்.

   அன்று நான் அறிந்துகொள்ள ஏங்கிய தகவல்களைத் தேடும் முயற்சியின்  முதல் பகுதியாக, சில மாதங்களுக்கு முன் விகடன் ஏற்பாடு செய்திருந்த 'வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' அமைந்தது. அந்தப் பயணத்தில் நாங்கள் சந்தித்த 2 முக்கியமான நபர்கள் 'திருச்சி பார்த்தி' மற்றும் 'இளையராஜா' அவர்கள். அவர்கள் இருவரும் எங்களைப் போல் வாசகர்களாக இருந்து பிறகு கல்வெட்டு ஆராய்ச்சிக்குள் தீவிரமாக இறங்கியவர்கள். வாழ்வாதாரத்திற்கு வேறு வேலைகளை செய்து கொண்டிருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சியைத் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் தொடர்ந்து செய்து வருகிறார்கள். எங்கள் பயணத்தில் நாங்கள் பார்வையிட்ட கோவில்களில் உள்ள பல அறிய கல்வெட்டுகளைப் பற்றியும் அதன் பொருள்கள், அது பொறிக்கபட்டக் காலம், அப்போது ஆண்ட மன்னர்கள் என்று பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

    அவர்கள் இதுவரை செய்த ஆராய்ச்சியின் ஒரு சிறிய தொகுப்புதான் இந்த 'தடயங்களைத் தேடி...' என்ற புத்தகம்.



    இந்தப் புத்தகத்தின் வாயிலாக பல விசித்திரமான வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் நமக்கு அளித்துள்ளனர். அரிகண்டம், நவகண்டம் எனும் பழக்கங்கள் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. புத்தகத்தின் முன் அட்டையில் காணப்படும் புகைப்படம் 'அரிகண்டம்' என்ற பழக்கத்தைக் குறிக்கிறது. 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பார்த்தவர்களுக்கு, தன் தலையை மூங்கிலில் கட்டி ஒரு முதியவர் தஞ்சாவூர் செல்வதற்கு முன்னே தன்னையே பலி கொடுத்துக் கொள்ளும் காட்சி நினைவுக்கு வரலாம். அவ்வாறு பலி கொடுத்துக் கொண்டவர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இன்றும் பல ஊர்களில் காணப் படுகின்றன.

    இந்தப் பழக்கங்களைத் தற்போது மூட நம்பிக்கைகள் என்று நாம் கூறினாலும், இது அந்த காலத்தில் மக்களின் விசுவாசத்தையும், அதீத அன்பையுமே குறிக்கின்றன. நம் அனைவருக்கும் குலதெய்வம் என்று ஏதோ ஒரு காட்டுக்குள் முனிசாமி, கருப்பசாமி, இருளப்பசாமி என்று இருப்பதற்குக் காரணம் நம் முன்னோர்களின் இத்தகைய தியாக செயல்களோ அல்லது போரில் உயிர்விட்ட வீர செயல்களாகவோ இருக்கலாம் அல்லவா?!!

    வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் என்றால் நமக்கு  முதலில் கோவில்கள் மட்டும் தான் நினைவிற்கு வரும். கோவில்களையும் தாண்டி தொன்மையான சுவர்கள், வீரர்கள் மற்றும் தியாகிகளுக்காக எடுக்கப்பட்ட நடுகற்கள், நீர் சேமிப்பிற்காகக் கட்டப்பட்ட குமிழித்தூம்புகள், வாய்க்கால்கள், அரிய சிற்பங்கள்,  பாறை ஓவியங்கள், சிதைந்த கற்றளிகள்(கற்கோவில்கள்), புதிர்நிலைகள்(labyrinth/maze) என்று பல தொன்மையான  கட்டமைப்புகளைக் கண்டு ஆராய்ந்து பகிர்ந்துள்ளனர்.

    புதுக்கோட்டையைச் சுற்றி இவ்வளவு சமண சமயச் சிற்பங்களும், கற்றளிகளும் இருப்பது மிகவும் வியப்பாக இருந்தது. அதுவும் அவ்வளவும் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்தது. பெரும்பாலான சிற்பங்கள் காடுகளிலும், மலைகளிலும், தனியார் வயல்களிலும் எந்த வித பராமரிப்பின்றி இருப்பது வருத்தத்தை அளிக்கின்றது. இப்படி புத்தகம் முழுவதும் நம்முடைய ஊர்களைச் சுற்றியுள்ள, ஆனால் நாம் இதுவரை கேள்விப்படாத அல்லது கண்டுகொள்ளாத பல வியக்க வைக்கும் தகவல்களாக உள்ளன.

    யோசித்துப் பாருங்கள், உங்கள் ஊரில் ஏதோ ஒரு மலை முகட்டில் இதுவரை கிறுக்கல்கள் என்று நினைத்த சில கல்வெட்டுகள் உண்மையில் 2000 ஆண்டுகள் முன்பு பொறிக்கப்பட்ட தமிழி(தமிழ் ப்ராஹ்மி) கல்வெட்டுகள் என்றும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் சங்ககாலப் பாண்டிய,  சேர மன்னர்களைப் பற்றி என்று தெரிந்தால் எவ்வளவு ஆச்சரியப் படுவீர்கள்!.கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உங்கள் அருகாமையில் ஏதோ ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோவிலோ, கல்வெட்டோ அல்லது மற்ற தொன்மங்களோ இருப்பதை அறிந்து கொள்வீர்கள் இந்தப் புத்தகத்தின் வாயிலாக.

    தனிப்பட்ட முறையில், நான் எங்கள் ஊர் ஆத்தூர் அருகில் ஒரு புதிர்நிலை ஒன்று இருப்பதை அறிந்தேன். ஆய்வாளர்கள் 2 வருடத்திற்கு முன்பு தான் கண்டு பிடித்திருக்கிறார்கள். அடுத்த முறை என் வீட்டிற்கு செல்லும்போது அதைப் போய் பார்ப்பது நிச்சயம். இப்படி வரலாற்றுத் தடயங்களைத் தேடி தமிழ் நாடு முழுவதும் திருச்சி பார்த்தி மற்றும் இளையராஜா தேடி அலைந்து, பல வரலாற்றுப் புத்தகங்கள்,சங்க இலக்கியங்கள் என்று பலநூல்களைப் படித்து ஆராய்ந்து, எளிமையாக நமக்கு எந்தெந்த ஊரில் என்னென்ன சிறப்புமிக்க இடங்கள் உள்ளன என்று ஆதாரத்துடன் விவரித்துள்ளனர்.

    இப்படி புத்தகம் முழுவதும் தகவல்களாக இருந்தாலும், கடைசியில் 2 புனைவுச் சிறுகதைகளும் உள்ளன. இரண்டுமே அரிகண்டம் செய்து கொண்ட வீரர்களின் கதை. குறிப்பாக, தன்னையே கொற்றவைக்கு பலி கொடுக்க முடிவு செய்த வீரன் ஒருவன் தன் கடைசி 30 நாட்களை எவ்வாறு கழிக்கிறான் என்ற கதை நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

    ஆகவே இந்தப் புத்தகம் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு வழிகாட்டி என்று தான் கூறுவேன். உங்கள் ஊரிலோ அல்லது உங்களது உற்றார் உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போதோ இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துச் சென்றால், அங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைக் கண்டு களிக்கலாம்.கோவில்களுக்கு வர அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குச் சற்று அதன் வரலாறையும், கல்வெட்டின் தகவல்களையும் சொன்னால் ஆர்வத்துடன் வருவார்கள் அல்லவா? ராஜா ராணி கதைகள் பிடிக்காத குழந்தைகளும் உள்ளார்களா என்ன?

    புத்தகத்தில் குறை என்று எனக்குத் தோன்றியது எழுத்துப் பிழைகள் தான். அவர்கள் என்னிடம் முன்பே கூறி இருந்தார்கள், 'எழுத்துப் பிழைகள் உள்ளன' என்று. நிறைய பேர் இந்தப் புத்தகத்தை வாங்க முற்பட்டால் அவர்கள் அதையும் திருத்தி மறுபதிப்பு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment