விகடன் ஏற்பாடு செய்திருந்த 'வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' சுற்றுலா-வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசாக இந்த புத்தகத்தை அளித்தார்கள். வாசன் அவர்களுடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள், தொழிலாளிகள், சினிமா நட்சத்திரங்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும் திரு. வாசனைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். வாசன் அவர்களின் 100-வது பிறந்தநாளை 2004-இல் கொண்டாடிய போது வெளியிடப்பட்டது.
திரு.வாசன் அவர்களைப் பற்றி வெறும் மேலோட்டமாகவே அதுவரை எனக்குத் தெரிந்திருந்தது. இந்த புத்தகம் மூலமாக அவரைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவரை அவருடைய தாயார்தான் கடும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார். அவர் தாயின் மீது அவருக்கிருந்த பாசமும் பக்தியும் புத்தகம் முழுவதும் பல பேரால் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. கடைசி வரை தாய் சொல்லைத் தட்டாமல், தாயை மதித்தவன் கண்டிப்பாக வாழ்க்கையில் உயருவான் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ளார்.
இளம் வயதில் தந்தை பெரியாரின் பத்திரிக்கைக்கு விளம்பரங்கள் சேர்த்துக்கொடுப்பது, வி.வி.பி மூலம் 1 ரூபாய்க்கு 144 பொருள்கள் என்று மெயில் ஆர்டர்-இல் விற்பனை செய்தது, அச்சகத்தில் வேலை பார்ப்பது என்று தொடங்கி 1928-இல் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆனந்த விகடனை வாங்கி இருக்கிறார். அதன் பிறகு ஆனந்த விகடனை முற்றிலுமாக அவர் மாற்றிய விதம், சந்தாதாரர்களை அதிகப்படுத்த அவர் கையாண்ட உபாயங்கள், சுழற்சியை அதிகப்படுத்த அறிமுகப்படுத்திய போட்டிகள், பந்தயங்கள், நகைச்சுவை ரசம் ததும்பிய அரசியல் செய்திகள் என்று அவ்வளவும் அந்தக்காலத்திற்கு முற்றிலும் புதுமை. நல்ல எழுத்தாளர்களைத் தேடித் தேடி விகனில் எழுத வைத்திருக்கிறார். அப்படி கண்டுபிடிக்கப் பட்டவர்களில் சிலர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர். கே. நாராயணன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியவர்கள்.
விகடனில் கதைகளை திருத்துவது, தொகுப்பது மூலமாக கற்றுக்கொண்ட விஷயங்களை கூடிய சீக்கிரம் சினிமாவில் பயன்படுத்துகிறார். அவருடைய வியாபாரத் தந்திரம், விளம்பரப் படுத்துதலில் அவருக்கிருந்த சாதுர்யம், எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல், கடும் உழைப்பு மூலமாக சினிமா துறையில் நுழைந்து விநியோகத்தில் ஆரம்பித்து, 1940-இல் ஜெமினி ஸ்டுடியோஸ் தொடங்கி தயாரிப்பு, இயக்கம் என்று அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி அடைந்திருக்கிறார். பிறகு ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்தது வெறும் படங்கள் மட்டும் அல்ல, சரித்திரங்கள்.
கல்கியின் 'தியாகபூமி' திரைப்படமாக எடுக்கப்பட்ட பொழுதே விகடனில் தொடராகவும் வெளியாகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் கதைக்கான வரைப்படங்கள் போடுவது வழக்கம். ஆனால் தியாகபூமி-க்கு ஷூட்டிங்-இல் இருந்து எடுக்கப்பட்ட சினிமா போட்டோ-களையே போட்டுள்ளார். சினிமாவுக்கு விளம்பரமும் ஆச்சு அல்லவா!
'சம்சாரம்' படத்திற்கு ரேஷன் கார்டு லிஸ்ட்-இல் இருந்து முகவரிகளை சேகரித்து, அனைத்து மகளிருக்கும் படத்தின் முன்னணி கதாபாத்திரமே தன் கதையை வந்து பார்க்குமாறு கடிதம் எழுதுவது போல் கடிதம் எழுதி விளம்பரம் செய்துள்ளார்.
'சந்திரலேகா' இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.தன் சொத்துக்கள் அனைத்தையும் அந்த திரைப்படத்தில் செலவிட்டுள்ளார். கிளைமாக்ஸ் டிரம்ஸ் காட்சி மட்டும் 2 மாதங்கள் படமாக்கப் பட்டிருக்கிறன்றன. அது படமாக்கப்பட்ட விதத்தைப் படித்தால் வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள். சில காட்சிகளை மட்டும் ஹிந்தியில் எடுத்து, டப் செய்து ஹிந்தியில் வெளியிட அங்கும் பெரிய ஹிட். தென்னிந்தியாவில் இருந்து இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய முதல் படம். அந்த படத்தின் வெற்றி தான், பின் ஏவிஎம், பி.நாகிரெட்டி அனைவரும் ஹிந்தி சினிமாவுக்குள் நுழையக் காரணமாக இருந்தது என்று அவர்களே கூறி இருக்கிறார்கள்.
பின் மற்றுமொரு பிரம்மாண்ட படைப்பான 'ஒவ்வையார்'. ஒவ்வையார் கிளைமாக்ஸ்-காக யானைகளை தேடி அலைந்து நடிக்க வைத்தது மற்றுமொரு வியக்கத்தகும் பெரும்கதை. ஒவ்வையார் விளமபரத்திற்கு பட ரிலீஸ் அன்று அணைத்து தியேட்டர் முன்பும் கோவில் கோபுரம் போல் செட் போட்டுள்ளார். படம் பார்த்து விட்டு ரசிகர்கள் திருநீர் குங்குமம் கூட வாங்கிப் போயிருக்கின்றனர்.
சந்திரலேகா-விற்குப் பிறகு ஹிந்தி-யிலும் பல படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். திலிப் குமார், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், என்று இந்தியாவின் பல மொழிகளின் சூப்பர்ஸ்டார்களும் ஜெமினி நிறுவனத்தின் படத்தில நடிக்க வேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு, ஜெமினி ஸ்டுடியோஸ் இந்தியா முழுவதும் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் வந்தால் கூட அவர்கள் காண விரும்பும் இடங்களில் ஜெமினி ஸ்டுடியோஸ் கண்டிப்பாக இருந்திருக்கிறது.
அவருடைய perfectionism பற்றியும் கூறியே ஆக வேண்டும். பிரிவியூ ஷோ-வில் ஒரு படத்திற்கு 31 இடங்களில் கைத்தட்டு வரும் என்று அவர் கூறி, 30 இடங்களில் மட்டும் கைத்தட்டு வர, வராத அந்த ஒரு சீனை ஆராய்ந்து சில மாற்றங்கள் செய்து மறுபடியும் வெளியிட்டிருக்கிறார். ஆம் 31-ஆம் கைத்தட்டு வந்தது இம்முறை. சந்திரலேகா படத்தை வாங்க வந்த கேரள விநியோகஸ்தர் ஒருவர், 'சர்க்கஸ் சீனில் நடிகை தொடை தெரிகிறது, அதை கட் செய்ய வேண்டும்' என்று கூற, அதற்கு மறுத்து 'என் படத்தை எந்த மாற்றமும் இல்லாமல் தான் திரையிட வேண்டும்' என்று ஒப்பந்தத்திலும் சேர்க்கச் சொல்லி இருக்கிறார்.
திறமையாளிகளை ஊக்குவிப்பதில் வாசனுக்கு நிகர் வாசன் தான். 1960-களில் வியட்நாம் போர் குறித்த ஒரு கட்டுரை வாசனுக்கு மிகவும் பிடித்துப்போகவே, கட்டுரைக்கான 150 ரூபாய் செக்-ஐ நிறுத்தச் சொல்லி விட்டு, தானே அந்த எழுத்தாளருக்கு ஒரு செக் அனுப்பி உள்ளார். அந்த செக்-இல் இருந்த தொகை நான்காயிரத்து ஐநூறு. ஒரு படத்திற்கான நீர்வீழ்ச்சி சீன்-களை ரஷ் பார்க்கும்பொழுது சீன்-கள் அனைத்தும் சரி இல்லாமல் மீண்டும் ஷூட்டிங் போகவேண்டும் என்று அனைவரும் சொல்ல, அங்கு இருந்த ஒருவர் மட்டும், 'இது கேமரா தவறு அல்ல, பிரின்டிங் தவறு' என்று சுட்டிக்காட்ட, மீண்டும் பிரிண்ட் செய்தபோது சீன்-கள் ஒழுங்காகவே இருந்திருக்கிறது. உடனே ஸ்பாட்-இல் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருக்கார்(மீண்டும் ஷூட்டிங் போயிருந்தால் 70 ஆயிரம் செலவு ஆகி இருக்கும்).
எழுத்தாளர்கள் மீது அவருக்கு அளவு கடந்த மரியாதை. எழுத்தாளர்களைப் பற்றி திருச்சியில் ஒரு முறை ஆற்றிய சொற்பொழிவைப் படித்தால் எழுத படிக்க தெரியாதவனுக்குக் கூட எழுத ஆசை வரும். ஒரு முறை விகடன் ஆபீஸ்-இல் கல்கி-யின் அறைக்குச் சென்ற வாசன் கல்கி யோசனையில் ஆழ்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு தான் வந்தது அறிவிக்காமலே அரை மணி நேரம் வெளியில் காத்திருந்திருக்கிறார். விகடனில் பிரசுரமான எந்த கதைக்கும் காப்பீட்டுத் தொகை, சினிமா உரிமைத் தொகை என்று அனைத்தையும் அந்த எழுத்தாளருகே அனுப்பி வைத்திருக்கிறார்(விகடனில் வெளியானதால் கதைகள் விகடனிற்குத்தான் சொந்தம்).
அவர் படங்களைப் போலவே அவர் மகளின் திருமணத்தையும் 4 நாட்கள் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார். அனைத்து மக்களுக்கும் உள்ளே அனுமதி தர, நான்கு நாட்கள் போதாது என்று மீதும் 10 நாட்கள் நீட்டித்திருக்கிறார் .
எடுத்த எந்த விஷயத்தையும் தெரிந்தே செய்திருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம்: குதிரை ரேஸ் பிரியரான வாசன் மும்பை-இல் நடந்த ஒரு ரேஸ்-இல் அவர் பந்தயம் கட்டிய குதிரை தோற்றுள்ளது. அவர் கணிப்புப் படி அந்த குதிரை ஜெயிக்க கூடியது என்று அவர் நம்பி இருந்தார். ரேஸ் முடிந்ததும், தோற்ற அந்த குதிரையை விலைக்கு வாங்கி பூனே எடுத்துச் சென்று குதிரை மற்றும் சவாரி செய்பவனுக்கு பயிற்சி கொடுத்து மீண்டும் அந்த குதிரையை மும்பை-கு எடுத்துச் சென்று பந்தயத்தில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.
இப்படி பக்கத்துக்கு பக்கம் அவரைப் பற்றிய விந்தையான, நம்பமுடியாத, பிரமிக்க வைக்கும் செய்திகள் குவிந்துள்ளன இந்த புத்தகத்தில். இந்தப் புத்தகம் படிக்கும் எவருக்கும் இப்படி ஒரு 'பாஸ்'-இடம் வேலை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் வரும். அப்படி யாராவது வேலையை விட்டுவிட்டு விகடன்-இல் சேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.எழுத்தாளர், பத்திரிகையாளர், படத் தயாரிப்பாளர், இயக்குனர், தொழிலதிபர், முதலாளி, விளம்பர மேதை என்று பல்துறை வல்லுனராக வாழ்ந்துள்ளார் திரு.வாசன் அவர்கள். அவர் தமிழ் நாட்டிற்கும், இந்திய/தமிழ் சினிமாவிற்கும், தமிழ் பத்திரிகைக்கும் எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும் அமுதசுரபியாக இருந்துள்ளார். நான் இங்கு கூறியது ஒரு பருக்கை தான்.
Excellent narration da... keep going... I get the feel of reading the whole book....
ReplyDeleteWell Narrated Ila.வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteReally got goosebumps after reading this macha..keep going!! Kudos!!
ReplyDeleteWell written
ReplyDelete