Monday, July 6, 2020

படித்ததில் பாதித்தது - தடயங்களைத் தேடி...

    சில வருடங்களுக்கு முன் நான் அமெரிக்கா-வில் வசித்துக் கொண்டிருந்தபொழுது ஒரு வார இறுதியில் பொழுதைக் கழிப்பதற்காக அருகாமையில் சுற்றிப் பார்க்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று தேடி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தைப் பார்க்கச் சென்றேன். வரலாற்று சிறப்பு என்றால் மிஞ்சிப்போனால் 200 வருடங்களுக்கு முன் கட்டிய ஒரு வீடு,  அவ்வளவு தான். யாரோ அந்த ஊர் மேயர் வசித்த இடமாம், அவர் உபயோகித்த நாற்காலிகள், உணவருந்தும் மேஜை, நூலகம், சிம்னி விளக்குகள் என்று அனைத்தையும் அதே இடத்தில் வைத்து, பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நபருக்கு 10 டாலர் வீதம் வசூலித்தனர். அதைக் கண்டபோது எனக்கு வியப்பாக இருந்தது. 'நம்ம ஊரில் கிராமங்களில் உள்ள பழைய பண்ணையார், சமீன்தார் வீடுகள் கூட இதை விட அழகாக இருக்குமே, இந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இதைப் பார்ப்பதற்கு 10 டாலர் வேறு வசூலிக்கிறார்கள்' என்று சப்பு தட்டிக் கொண்டிருந்தேன்.அதே சமயம், 'சில நூறு வருடங்கள்தான் பழமை என்றாலும் இதை ஒரு பொக்கிஷமாகக் கருதி இன்றும் நன்றாக பராமரித்து வருகிறார்களே' என்று வியக்கவும் செய்தேன்.

    நம் நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்து இன்றும் அற்புதமாய் இருக்கும் பல கோவில்கள், கோட்டைகள் மற்றும் பல தொன்மையான படைப்புகள் பராமரிப்பின்றி இருப்பதை நினைத்து வருந்தினேன். பராமரிப்பது இருக்கட்டும், முதலில் எத்தனை பேருக்கு நம்மைச் சுற்றி இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களைப் பற்றியோ, அங்கு உள்ள கல்வெட்டுகளைப் பற்றியோ தெரியும்? அந்தக் கோவில்களை கட்டியது யார்? அங்கு கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டிருக்கும் தகவல்கள் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்?அதன் பெருமைகள் தெரிந்தால் தானே அதைப் போற்றிப் பராமரித்துப் பாதுகாக்கத் தோன்றும்.

   அன்று நான் அறிந்துகொள்ள ஏங்கிய தகவல்களைத் தேடும் முயற்சியின்  முதல் பகுதியாக, சில மாதங்களுக்கு முன் விகடன் ஏற்பாடு செய்திருந்த 'வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' அமைந்தது. அந்தப் பயணத்தில் நாங்கள் சந்தித்த 2 முக்கியமான நபர்கள் 'திருச்சி பார்த்தி' மற்றும் 'இளையராஜா' அவர்கள். அவர்கள் இருவரும் எங்களைப் போல் வாசகர்களாக இருந்து பிறகு கல்வெட்டு ஆராய்ச்சிக்குள் தீவிரமாக இறங்கியவர்கள். வாழ்வாதாரத்திற்கு வேறு வேலைகளை செய்து கொண்டிருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சியைத் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் தொடர்ந்து செய்து வருகிறார்கள். எங்கள் பயணத்தில் நாங்கள் பார்வையிட்ட கோவில்களில் உள்ள பல அறிய கல்வெட்டுகளைப் பற்றியும் அதன் பொருள்கள், அது பொறிக்கபட்டக் காலம், அப்போது ஆண்ட மன்னர்கள் என்று பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

    அவர்கள் இதுவரை செய்த ஆராய்ச்சியின் ஒரு சிறிய தொகுப்புதான் இந்த 'தடயங்களைத் தேடி...' என்ற புத்தகம்.



    இந்தப் புத்தகத்தின் வாயிலாக பல விசித்திரமான வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் நமக்கு அளித்துள்ளனர். அரிகண்டம், நவகண்டம் எனும் பழக்கங்கள் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. புத்தகத்தின் முன் அட்டையில் காணப்படும் புகைப்படம் 'அரிகண்டம்' என்ற பழக்கத்தைக் குறிக்கிறது. 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பார்த்தவர்களுக்கு, தன் தலையை மூங்கிலில் கட்டி ஒரு முதியவர் தஞ்சாவூர் செல்வதற்கு முன்னே தன்னையே பலி கொடுத்துக் கொள்ளும் காட்சி நினைவுக்கு வரலாம். அவ்வாறு பலி கொடுத்துக் கொண்டவர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இன்றும் பல ஊர்களில் காணப் படுகின்றன.

    இந்தப் பழக்கங்களைத் தற்போது மூட நம்பிக்கைகள் என்று நாம் கூறினாலும், இது அந்த காலத்தில் மக்களின் விசுவாசத்தையும், அதீத அன்பையுமே குறிக்கின்றன. நம் அனைவருக்கும் குலதெய்வம் என்று ஏதோ ஒரு காட்டுக்குள் முனிசாமி, கருப்பசாமி, இருளப்பசாமி என்று இருப்பதற்குக் காரணம் நம் முன்னோர்களின் இத்தகைய தியாக செயல்களோ அல்லது போரில் உயிர்விட்ட வீர செயல்களாகவோ இருக்கலாம் அல்லவா?!!

    வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் என்றால் நமக்கு  முதலில் கோவில்கள் மட்டும் தான் நினைவிற்கு வரும். கோவில்களையும் தாண்டி தொன்மையான சுவர்கள், வீரர்கள் மற்றும் தியாகிகளுக்காக எடுக்கப்பட்ட நடுகற்கள், நீர் சேமிப்பிற்காகக் கட்டப்பட்ட குமிழித்தூம்புகள், வாய்க்கால்கள், அரிய சிற்பங்கள்,  பாறை ஓவியங்கள், சிதைந்த கற்றளிகள்(கற்கோவில்கள்), புதிர்நிலைகள்(labyrinth/maze) என்று பல தொன்மையான  கட்டமைப்புகளைக் கண்டு ஆராய்ந்து பகிர்ந்துள்ளனர்.

    புதுக்கோட்டையைச் சுற்றி இவ்வளவு சமண சமயச் சிற்பங்களும், கற்றளிகளும் இருப்பது மிகவும் வியப்பாக இருந்தது. அதுவும் அவ்வளவும் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்தது. பெரும்பாலான சிற்பங்கள் காடுகளிலும், மலைகளிலும், தனியார் வயல்களிலும் எந்த வித பராமரிப்பின்றி இருப்பது வருத்தத்தை அளிக்கின்றது. இப்படி புத்தகம் முழுவதும் நம்முடைய ஊர்களைச் சுற்றியுள்ள, ஆனால் நாம் இதுவரை கேள்விப்படாத அல்லது கண்டுகொள்ளாத பல வியக்க வைக்கும் தகவல்களாக உள்ளன.

    யோசித்துப் பாருங்கள், உங்கள் ஊரில் ஏதோ ஒரு மலை முகட்டில் இதுவரை கிறுக்கல்கள் என்று நினைத்த சில கல்வெட்டுகள் உண்மையில் 2000 ஆண்டுகள் முன்பு பொறிக்கப்பட்ட தமிழி(தமிழ் ப்ராஹ்மி) கல்வெட்டுகள் என்றும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் சங்ககாலப் பாண்டிய,  சேர மன்னர்களைப் பற்றி என்று தெரிந்தால் எவ்வளவு ஆச்சரியப் படுவீர்கள்!.கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உங்கள் அருகாமையில் ஏதோ ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோவிலோ, கல்வெட்டோ அல்லது மற்ற தொன்மங்களோ இருப்பதை அறிந்து கொள்வீர்கள் இந்தப் புத்தகத்தின் வாயிலாக.

    தனிப்பட்ட முறையில், நான் எங்கள் ஊர் ஆத்தூர் அருகில் ஒரு புதிர்நிலை ஒன்று இருப்பதை அறிந்தேன். ஆய்வாளர்கள் 2 வருடத்திற்கு முன்பு தான் கண்டு பிடித்திருக்கிறார்கள். அடுத்த முறை என் வீட்டிற்கு செல்லும்போது அதைப் போய் பார்ப்பது நிச்சயம். இப்படி வரலாற்றுத் தடயங்களைத் தேடி தமிழ் நாடு முழுவதும் திருச்சி பார்த்தி மற்றும் இளையராஜா தேடி அலைந்து, பல வரலாற்றுப் புத்தகங்கள்,சங்க இலக்கியங்கள் என்று பலநூல்களைப் படித்து ஆராய்ந்து, எளிமையாக நமக்கு எந்தெந்த ஊரில் என்னென்ன சிறப்புமிக்க இடங்கள் உள்ளன என்று ஆதாரத்துடன் விவரித்துள்ளனர்.

    இப்படி புத்தகம் முழுவதும் தகவல்களாக இருந்தாலும், கடைசியில் 2 புனைவுச் சிறுகதைகளும் உள்ளன. இரண்டுமே அரிகண்டம் செய்து கொண்ட வீரர்களின் கதை. குறிப்பாக, தன்னையே கொற்றவைக்கு பலி கொடுக்க முடிவு செய்த வீரன் ஒருவன் தன் கடைசி 30 நாட்களை எவ்வாறு கழிக்கிறான் என்ற கதை நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

    ஆகவே இந்தப் புத்தகம் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு வழிகாட்டி என்று தான் கூறுவேன். உங்கள் ஊரிலோ அல்லது உங்களது உற்றார் உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போதோ இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துச் சென்றால், அங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைக் கண்டு களிக்கலாம்.கோவில்களுக்கு வர அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குச் சற்று அதன் வரலாறையும், கல்வெட்டின் தகவல்களையும் சொன்னால் ஆர்வத்துடன் வருவார்கள் அல்லவா? ராஜா ராணி கதைகள் பிடிக்காத குழந்தைகளும் உள்ளார்களா என்ன?

    புத்தகத்தில் குறை என்று எனக்குத் தோன்றியது எழுத்துப் பிழைகள் தான். அவர்கள் என்னிடம் முன்பே கூறி இருந்தார்கள், 'எழுத்துப் பிழைகள் உள்ளன' என்று. நிறைய பேர் இந்தப் புத்தகத்தை வாங்க முற்பட்டால் அவர்கள் அதையும் திருத்தி மறுபதிப்பு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

Saturday, June 20, 2020

படித்ததில் பாதித்தது - விரும்பிக் கேட்டவள்


    ஊரடங்கில் பொழுதைப் போக்குவதற்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் 'சென்னையும் நானும்' தொடரை கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு எபிசொட்-இல் அவர் எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு, பாடகர் பி. பி. ஸ்ரீனிவாஸ் அவரை மிகவும் பாராட்டியதைப் பற்றிக் கூறி இருந்தார். அந்தச் சிறுகதையின் தலைப்பு 'விரும்பிக் கேட்டவள்'. தன் வாழ்நாள் முழுவதும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களை நாள் தோறும் கேட்டுக் கழித்த ஒரு பெண் தன் சாகும் தருவாயிலும் அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டே இறப்பது தான் அந்தக் கதை என்று ஒரு வரியில் கூறி இருந்தார்.அந்தக் கதையைப் படமாக எடுக்கவும் பி.பி.ஸ்ரீனிவாஸ் முயற்சி செய்ததாகவும் கூறி இருந்தார்.

    கதையை ஒரு வரியில் கேட்டபோதே அது என்னுடைய ஆர்வத்தைத் தூண்டியது. ஒரு கலைஞனுக்கு ரசிகராக இருக்கலாம், தீவிர ரசிகராகக் கூட இருக்கலாம். 'ஆனால் வாழ்நாள் முழுவதும் ஒரு பாடகனையும் அவன் குரலையும் தன் வாழ்வில் ஒரு அங்கமாக இணைத்து ஒருவர் வாழ முடியுமா? அதைக் கதையாக எழுதினாலும் அது எந்த அளவிற்கு நம்மில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?' என்று எனக்கு ஒரே விந்தையாக இருந்தது.

    உடனே அந்தக் கதையை இன்டர்நெட்-இல் தேடிப் படித்தேன். சிறு வயதில் இருந்து பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களையே கேட்டு வளர்ந்த, வாழ்ந்த 'வசந்தி சித்தி'-யின் கதை அது. கதை 5-6 பக்கங்கள் தான். நீங்களும் தேடிப் படிக்கலாம். படித்து முடித்தவுடன் அழுகை என் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது. வெறும் 6 பக்கங்களிலே 'வசந்தி சித்தி'-யை விட்டுப் பிரிய எனக்கு மனம் இல்லை. சினிமா பாடல்கள் நம் வாழ்வில் எப்படி ஒரு முக்கியத்துவத்தை அடைந்துள்ளது என்பதை மிக எளிய ஆனால் மனதைத் தொடுகிற வார்த்தைகளில்  விவரித்திருந்தார் ராமகிருஷ்ணன் அவர்கள்.

    அந்தக் கதையின் மையமாக அமைந்த பாடல், 'கொடி மலர்' படத்தில் வந்த 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்' என்ற பாடல். அந்தப் பாடலை நான் அதற்கு முன்பு கேட்டதில்லை. கதையைப் படித்து முடித்தவுடன் அந்தப் பாடலைத் தேடிக் கேட்டேன். கண்ணதாசன் வரிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் அந்தப் பாட்டு மிக ரம்யமாக இருந்தது. இந்தப் பாடலை எப்படி நான் இவ்வளவு நாள் கேட்காமல் இருந்தேன் என்று ஆச்சர்யமாக இருந்தது. என் தலைமுறை மக்களுக்கு சிவாஜி, எம். ஜீ. ஆர் பாடல்கள் தெரிந்திருந்தாலே அதிசயம் தானே? முத்துராமன் கதாநாயகனாக நடித்திருந்ததால் பெரிதாக தெரிய வில்லை போலும்.

    பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தேன். நான் சில பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களை கேட்டு இருந்தாலும் இந்த பாடல் அவர் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தியது. சிலமுறை கேட்ட பிறகு மீண்டும் அந்தச் சிறுகதையைப் படித்தேன். இம்முறை அழுகையை அடக்க முடியவில்லை. முக்கியமாக சில வரிகள் என் நெஞ்சைப் பிசைந்தது. அந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். சில மணி நேரங்கள் அந்தப் பாடலையும் அந்தச் சிறுகதையையும் மாற்றி மாற்றிக் கேட்டும் படித்துக் கொண்டும் இருந்தேன்.

    நம் வாழ்வில் பாடல்கள் அனைத்துத் தருணங்களிலும் துணை நிற்கின்றன. சந்தோசமாக இருக்கும் போது பாடல்களைக் கேட்டு மேலும் களிப்படைகிறோம், சோகமாக இருக்கும்போது பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைகிறோம், சலிப்படையும் பொழுது பாடல்கள் கேட்டு பொழுதைப் போக்குகின்றோம். ஒவ்வொருவருக்கும் ஏதோ சில பாடல்களோ, ஏதோ ஒரு பாடகரின் குரலோ அல்ல ஏதோ ஒரு இசைக்கலைஞனின் இசையோ பிடித்திருக்கிறது. பாடல்கள் நம்முடைய சில நேரங்கள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. சில நேரங்களில் நமது வாழ்வின் சில அனுபவங்களைப் பாடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. பிறகு அந்தப் பாடலைக் கேட்கும் பொழுது அந்த அனுபவங்கள் மீண்டும் நம் நினைவில் படர்கின்றன.

    'ஒரு கலைஞனின் படைப்பு, கூட்டத்தில் எறிந்த அம்பு போல, அது யாரை எப்போது தாக்கும் என்று கூற முடியாது' என்று எங்கோ படித்த ஞாபகம். அப்படி பி.பி.ஸ்ரீனிவாஸ்-இன் குரல் 'வசந்தி சித்தி'-யை தாக்கியுள்ளது. அதே போல் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்து என்னையும் தாக்கியுள்ளது. இனி 'மௌனமே பார்வையால்' பாட்டைக் கேட்டால் என்னால் 'வசந்தி சித்தி'-யை நினைக்காமல் இருக்க முடியாது.

Friday, May 8, 2020

வந்தியத்தேவனின் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்

          கல்லூரி நாட்களில் நான் வாரம் தவறாமல் படித்த இதழ் 'ஆனந்த விகடன்'. பல ஆண்டுகளுக்குப் பிறகு சில நாட்களுக்கு முன் ஒரு தென்னிந்திய மளிகைக் கடையில் அந்த இதழ் என் கண்ணில் பட்டபோது எதேச்சையாக வாங்கினேன். 'வந்தியத்தேவனின் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' என்ற ஒரு விளம்பரப் பக்கத்தைப் பார்த்தவுடன் குதூகலம் அடைந்தேன். வந்தியத்தேவன் போல வீராணம் ஏரியில் ஆரம்பித்து கோடிக்கரை வரை அந்த சுற்றுப்பயணம் திட்டமிடப் பட்டிருந்தது. தனக்கு மிகவும்  பிடித்த சினிமா அல்லது நாவல்-இல் வரும்  இடங்களை நேரில் சென்று பார்ப்பது அந்த ரசிகனுக்கு ஒரு தனி இன்பத்தை அளிக்கும். அதே நாவல்களைப்  படித்த மற்ற ரசிகர்களால் மட்டுமே அதை புரிந்து கொள்ளமுடியும். அப்படி புரிந்து கொண்ட பல ரசிகர்களுடன் ஒன்றாக அப்படியொரு பயணத்தை மேற்கொள்வது இன்னும் பேரின்பமாகத்தானே இருக்க முடியும்.

        ஆகையால் உடனே அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு அதன் விவரங்களை அறிந்துகொண்டேன். தெரிந்து கொண்ட கையோடு உடனே மனைவியிடம் இதைப் பற்றிக் கூறி, அவளை விட்டுத் தனியாக செல்லவும் அனுமதி வாங்கினேன். அவள் மராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பதாலும், இன்னும் தமிழ் பேச முடியாததாலும் அவளை அழைத்துச் செல்வது சாத்தியம் இல்லை. எனினும் நாங்கள் காதலித்த நாட்களிலேயே 'தமிழில் பொன்னியின் செல்வன் எனக்கு மிகப் பிடித்த நாவல்' என்று பல முறை அவளிடம் மணிக்கணக்கில் கடலை போட்டதால், இப்பொழுது அவளுக்கு என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொள்ள நேர்ந்தது. 'கடலை' வெட்டிப்பேச்சு என்று யார் கூறியது? :)

     உடனே சுற்றுப்பயணத்திற்கு முன்பதிவு செய்தேன். பூனே-வில் இருந்து சென்னை சென்று வர, விமான டிக்கெட்களையும் முன்பதிவு செய்தேன். பிறகு ஆர்வத்தை அடக்க முடியவில்லை. 2 வாரங்கள் காத்திருக்க வேண்டுமே அதற்குள் பொன்னியின் செல்வன்-ஐ மீண்டும் ஒரு முறை படித்து விடலாம் என்று முடிவு செய்து படிக்கவும் தொடங்கினேன். நான் முதல் முறை படித்தது கிட்ட திட்ட 10 ஆண்டுகளுக்கு முன். இப்பொழுது மறுபடியும் படிக்கும்பொழுதும் அதே சுவாரஸ்யம் இருந்தது. மீண்டும் சோழ நாட்டில் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.

   ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு தடங்கல். கரோனாவைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. அது நாளுக்கு நாள் பரவி வரும் செய்தி என்னை 10-ஆம் நூற்றாண்டு சோழ நாட்டில் இருந்து இழுத்து வந்தது. இந்தியா-வில் அந்த நோய் பரவி வரும் தருவாயில் இந்தப் பயணத்தை இப்பொழுது மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் பயமும் என்னுள் எழுந்தது.

   கரோனாவைரஸ் இன்னும் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பிக்காததால் பயணத்திற்கு முன்தின நாள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மட்டும் மேற்கொண்டு பயணத்தில் செல்வது  என்று முடிவு செய்தேன். பயணத் தேதிகள் மார்ச் 7,8 மற்றும் 9 (ஊரடங்கிற்கு 2 வாரங்கள் முன்பு).

    ஒத்த சிந்தனையாளர்கள் கூடி அமர்ந்து விவாதிப்பது தான் உலகத்திலேயே சிறந்த இன்பம் என்று வள்ளுவர் ஒரு குறளில் கூறி இருப்பார். இந்தப் பயணம் அப்படியான ஒரு அனுபவம். ஓர் இனிய பண்டிகை தினத்தன்று அனைத்து உறவினர்களும் கூடி, பொழுதைக் களிக்க அண்டை  வீட்டு வதந்திகளை ஆராயாமல் , சினிமா, அரசியல் பேசாமல் ,சிறியோரை பெரியோரும் பெரியோரை சிறியோரும் குற்றம் கடியாமல், வயது வரம்பின்றி அனைவரும் பொன்னியின் செல்வன் நாவல் பற்றியும் சோழர் வரலாறு பற்றியும் உரையாடி லயித்தால் எப்படி இருக்கும்? புத்தகம் விரும்பிக்கு அதைப்பற்றி உரையாட ஒப்பான ஒருவர் கிடைத்தாலே புளகாங்கிதம் அடைந்துவிடுவார்கள். நம் அனைத்து உறவினர்களும் அப்படி அமைவது என்பது கனவிலும் நடக்க இயலாத ஒரு நிகழ்வே அல்லவா?

      அனால் அப்படி ஒரு அனுபவத்தை, உணர்வை விகடன் குழுவினர் இந்தப் பிரயாணத்தின் வாயிலாக ஏற்படுத்தித் தந்தனர். என் உறவினர்கள் அனைவரையும் அவர்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கச் செய்துவிடவில்லை. மாறாக பொன்னியின் செல்வன் படித்த ரசிகர்களை ஒன்று திரட்டி 3 நாள் பயணத்தில் உறவினர்களாக ஆகிவிட்டார்கள். பயணம் தொடங்கிய சில மணி நேரங்களிலே எங்கள் பரஸ்பர உறவினர்கள் கல்கி மற்றும் விகடன் மூலமாக அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிவிட்டோம். இந்த 3 நாள் பயணத்தில் நாங்கள் பேருந்தில் சினிமா பாடல்கள் கேட்கவில்லை, அந்தாக்சரி ஆடவில்லை, சொந்தக்கதை சோகக்கக்கதைகள் பேசவில்லை. முழுக்க முழுக்க பொன்னியின் செல்வன் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். அதில் எங்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்கள், பிடித்தமான காட்சிகள், அதன் கதைக்களம் பற்றிய வினாடி வினா, அது எங்களுக்குள் ஏற்படுத்திய அனுபவங்கள், அதனால் தமிழ் மீதும் தமிழ் வரலாறு மீதும் ஏற்பட்ட ஈடுபாடுகள் இத்யாதி..இத்யாதி..

    பயணத் தொடக்க நாளிலே காலை 5:30 மணிக்கு அனைவரும் அண்ணாசாலையில் உள்ள விகடன் அலுவலகத்தில் கூடினோம். விகடன் தாத்தா சிரித்துக்கொண்டே வரவேற்றார். விகடன் அலுவலகத்தை முதல் முறையாக நேரில் கண்டதே ஒரு இன்பகரமான நிகழ்ச்சியாக இருந்தது. காலை  6 மணி அளவில் எங்கள் பயணம் தொடங்கியது. ஆதி அந்தம் இல்லாத காலவெள்ளத்தில் ஏ.சி வோல்வோ பஸ்ஸில் ஏறி மணிக்கு ஓரிரண்டு  நூற்றாண்டு மற்றும் 50-60 கி.மி வீதம் எளிதில் கடந்து வந்தியத்தேவன் தொடங்கிய பயணம் போல் வீராணம் ஏரியை அடைந்தோம். வந்தியத்தேவன் கண்டதை போலவே அந்த ஏரி கடல் போல் விரிந்து தான் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

  அதன்பிறகு கடம்பூர். கடம்பூர் மாளிகை இல்லாததால் 10,11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 2 கோவில்களையும் அதில் உள்ள கல்வெட்டுகளையும் கண்டு ரசித்தோம். பிறகு ஆழ்வார்க்கடியான் நம்பி வழிபட்ட வீராணத்து விண்ணகர கோவிலுக்கும் அதன்பிறகு அனந்தீசுவரர் கோவிலுக்கும்  சென்றோம். அங்கு இருந்த ராஜராஜசோழன் கல்வெட்டுகளைஆராய்ந்தோம் . ஆதித்தகரிகாலன் கொலை வழக்கு சம்பந்தமான தகவல்களை பார்த்தபொழுது, அதிலும் குறிப்பாக ரவிதாசன் பெயரைப் பார்த்தபொழுது கதையில் அடைந்த அதே அதிர்ச்சிக்கு உள்ளாகி உடலெங்கும் ரோமங்கள் குத்திட்டு நின்றது. அதன் அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு சில மணி நேரங்கள் ஆனது. 10 நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த ஒரு படுகொலை இப்பொழுதும் நம்மை பாதிக்கிறது என்றால் அது கல்கியினால்தான்.

  அன்று இரவு பொன்னியின் செல்வன் கதையை அனிமேஷன் மூலமாக படமாக்கிக் கொண்டிருக்கும் ஒரு படக்குழு எங்களுக்கு அதன் ட்ரைலர் மற்றும் சில தகவல்களை காண்பித்தார்கள். நந்தினி-ஐ 2 நொடிதான் காண்பித்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஒரு ஆபத்தான அழகுடன் ஸ்ரிஷ்டித்திருந்தார்கள்(நந்தினியை பற்றி எழுதாமல் எப்படி இந்த கட்டுரை முடிவு பெரும்? :) ). முடிவில் நாங்கள் கண்ட நிறைகுறைகளை அந்தப்படக்குழுவிடம் பகிர்ந்து கொண்டோம். அவர்கள் சீக்கிரம் பாகம் ஒன்றுக்கான திரைப்படத்தை வெற்றிகரமாக வெளியிட வாழ்த்துக்கள்.

  இரண்டாம் நாள் பழையாறை கோவில்களுக்குச் சென்றோம். ஒன்று பொன்னியின் செல்வனில் வரும் திருநந்திபுர விண்ணகரக் கோவில். பின் முழுமை பெறாத ஆனால் கம்பீரமான கீழ்ப்பழையாறையில் உள்ள திருசோமநாதசுவாமி கோவில். அதன்பின் ராஜராஜனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவிக்கு கட்டப்பட்ட பள்ளிப்படைக் கோவில்.தன் சிற்றன்னைக்காக ராஜேந்திர சோழன் கட்டியது. அதற்கான கெல்வெட்டுகள் அந்தக் கோவிலேயே உள்ளது. அந்தக் கோவில்-இல் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்தேறியது. மிகச்சிறிய அந்தக் கோவிலில் உண்டியல் கூடக் கிடையாது. மற்ற கோவில்களை போல் அந்த கோவிலில் வழிபாட்டிற்குப் பிறகு சில பிரயாணிகள் பூசாரிக்கு காணிக்கை செலுத்த முற்பட்டபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். "நான் கடவுளுக்கு தொண்டு செய்கிறேன். இனி என் வாழ்க்கையில் பணத்துக்கு எந்தவித தேவையும் இல்லை. என் வயிற்றிற்கு தேவை நாளுக்கு 2 முறை உணவு. அதை இறைவன் எப்படியாவது அளித்துவிடுகிறான். நான் பணத்தைப் பெற்று பாவம் செய்ய விரும்பவில்லை" என்று அவர் கூறியபோது எங்களுக்கு புல்லரித்து விட்டது. சில அம்மாக்கள் மனதுருகி உடனே அவர் காலில் விழுந்து தங்களை ஆசிர்வதிக்குமாறு கேட்க அவர் கண்ணிலும் கண்ணீர்த்துளி சிந்தியது. எங்கள் மனது நெகிழ்ந்தது. "உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று நாங்கள் வலியுறுத்த, அவரோ, "முடிந்தால் இந்தக்கோவில் கருவறைக்கு விளக்குகள் வாங்கிவையுங்கள்" என்றார். நாங்கள் அளித்த காணிக்கைகள் மூலமாக அந்த கோரிக்கையை வெகு விரைவில் நிறைவேற்றிய விகடன் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.

  அடுத்தகட்டமாக திருப்புறம்பியம் பள்ளிப்படை கோவிலுக்கு பறை இசையுடன் கூடிய வரவேற்புடன் சென்றடைந்தோம். இந்தப்பள்ளிப்படையின் வீர வரலாற்றைக்  கல்கி பொன்னியின் செல்வனில் விளக்கி இருந்தாலும் அதை மீண்டும் போர் நடந்த அதே இடத்தில் நின்று அந்தக் கோவில் பூசாரி சொல்லக் கேட்ட போது வீரமும் கம்பீரமும் மனதில் பொங்கி எழுந்தது. இந்தப் பூசாரி மற்றுமொரு மறக்கமுடியாத நபராக அமைந்தார். பிரான்ஸ்-இல் சிற்பக்கலை பயின்றும், 25 நாடுகளுக்கு மேல் பயணம் செய்தும் கடைசியாக தன் குடும்பம் பாதுகாத்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த சிறிய கோவிலை நிர்வகிக்க மீண்டும் தாய்நாடு திரும்பி இப்பொழுது தன மனைவி குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார்.

 பிறகு அதே இடத்தில பறை இசைக்கலைஞர்கள் அற்புதமான ஒரு நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார்கள். 45 நிமிடங்கள் அவர்கள் பறை இசைத்துக்கொண்டே ஆடியது அனைவரையும் எழுந்து ஆடும்படி தூண்டியது. அதைச்  சிறிதும் கட்டுப்படுத்தாமல் நாங்களும் கடைசியில் அவர்களுடன் ஆடி, இசைத்து மகிழ்ந்தோம். வாழக்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாக அமைந்தது.

  மூன்றாம் நாள் தஞ்சைப் பெரியகோவில் சென்றடைந்தோம். இந்தப்பயணம் தொடங்கும் முன்பே அனைவரும் உற்சாகமாக எதிர்பார்த்த ஒரு தருணம். பிரம்மிக்கவைக்கும் அழகும் கம்பீரமும் குடிகொண்ட கட்டடக்கலையின் உச்சம் தஞ்சை பெரியகோவில். நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம், சூரியன் மட்டும் கொஞ்சம் அவன் பார்வையின் உக்கிரத்தைக் கொஞ்சம் குறைத்தால். தஞ்சைக் கோவில் முன்பு அமர்ந்து பொன்னியின் செல்வன் ஒரு வினாடியாவது படிக்க வேண்டும் என்ற சிறிய ஆசையும் நிறைவேறியது.

                                                                             

 பயணத்தின் கடைசி இலக்காக கோடிக்கரை சென்றடைந்தோம். கடற்கரையில் பூங்குழலி போல் 'அலை கடல் தான் ஓய்ந்திருக்க' என்ற பாடலை பாடி மகிழ்ந்தோம். பின் குழகர் கோவிலில் களரி மற்றும் வர்மக்கலை பற்றிய நிகழ்ச்சிகள் எங்கள் பயணத்தை சரியான முறையில் நிறைவேற்றியதுடன் கம்பீரத்துடன் நல்வாழ்வு வாழ்ந்திட உதவும் சில தகவல்களையும் கொடுத்து வழி அனுப்பிவைத்தது.

  மறுநாள் காலை புறப்பட்டு சென்னை வரும் வழியில்  ஒவ்வொருவராய் விடைபெற்றுக்கொள்ள, ஆனந்தம் கலந்த ஒரு சோகம் அனைவருக்குள்ளும் குடி கொண்டது. கல்லூரிப் படிப்பு முடிவடைந்து நண்பர்களுடன் விடைபெறும் போது ஏற்படும் ஒர் உணர்வை ஒத்தது . வெறும் 4 வருட கல்லூரி பழக்கத்திற்கே அப்படியென்றால், 1000 வருடங்கள் கால வெள்ளத்தில் பயணம் செய்து எங்கள் வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், குந்தவை, நந்தினி மற்றும்  பூங்குழலி வாழ்ந்த இடங்களில் உலாவி, அளவளாவி, ஆர்ப்பரித்து  திரும்பி வந்தவர்கள் அவ்வாறு உணர்வதில் ஆச்சர்யம் இல்லையே?

Monday, April 13, 2020

ஊரடங்கின் மத்தியில் தமிழ் கல்வி 2 : கொங்கு தேர் வாழ்க்கை

    ஊரடங்கு  ஏப்ரல் மாத இறுதி வரை நீடிக்கப் பட்டுவிட்டது. தமிழ் படிப்பதற்கான காலமும் ஆர்வமும் கூடவே அதிகரித்து விட்டது.  பல வருடங்களுக்கு முன் வாங்கி வைத்திருந்த '401 காதல் கவிதைகள் - குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்', சுஜாதா-வால் எழுதப்பட்ட புத்தகம் அலமாரியில் இருந்து 'இப்பொழுது கூட என்னைப் படிக்காவிட்டால் வேறு எப்பொழுது படிக்கப் போகிறாய்' என்று கூறுவது போல் தோன்றியது. அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். குறுந்தொகை கவிதைகளுக்கு சுஜாதா எளிய விளக்கவுரை அளித்திருந்தார்.

    அதில் இரண்டாவது கவிதையின் முதல் வரியே என் கவனத்தை ஈர்த்தது. 'கொங்கு தேர் வாழ்க்கை' என்று அந்த வரிகள் ஆரம்பித்தன. இதை எங்கேயோ ஏற்கனவே கேட்டது போல் தோன்றியது எனக்கு. ஒரு வேலை பள்ளி நாட்களில் படித்திருப்பேனோ என்று நினைத்தேன். பள்ளியில் படித்த தமிழ் இன்னும் நமக்கு நினைவிருக்கிறதே என்று என் மூளையின் ஞாபக சக்தியை நினைத்து மெச்சினேன்.




    அந்த கவிதையின் விளக்கத்தைப் படித்த போது தான், அது எங்கிருந்து எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று உணர்ந்தேன். திருவிளையாடல் படத்தில் செண்பக பாண்டியன் சந்தேகத்தைத் தீர்க்க சிவன் எழுதிய பாடல். சிவாஜி வேகமாய் இந்த பாடலை கூறியதில் 'கொங்கு தேர் வாழ்க்கை' மட்டும் தான் என் மனதில் படிந்திருந்தது. நான் அடிக்கடி விரும்பி பார்க்கும் காட்சி அது. தருமி தனியே புலம்புவது முதல் சிவன் நக்கீரனை எரிக்கும் வரை நகைச்சுவை, நடிப்பு, சிவாஜி யின் தமிழ் உச்சரிப்பு, சிவனுக்கும் நக்கீரனுக்கு வாக்குவாதம் என்று பல தொனிகள் மாரி சிவன்(சிவாஜி) 'நக்கீரா' என்று கர்ஜிக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் எனக்கு மயிர்கூச்செறிதல் உண்டாக்கும் காட்சி அது.

    அந்தப் பாடல்:

    கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 
    காமம் செப்பாது கண்டது மொழிமோ:
    பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல் 
    செறி எயிற்று, அரிவை கூந்தலின் 
    நறியவும்  உளவோ, நீ அறியும் பூவே.

    சிவாஜி கூறிய விளக்கம் நமக்கு புரியுமே தவிர அந்தப் பாட்டை தெரிந்து கொள்ள எத்தனை பேர் முயற்சித்திருப்போம் என்று தெரியாது. இங்கு எதேச்சையாக குறுந்தொகையில் இரண்டாம் பாடலே அது தான். இப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம். திருவிளையாடல் படம் பரஞ்சோதி முனிவர் 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'திருவிளையாடல் புராணம்' என்ற நூலில் இருந்து தழுவப்பட்டதாகும். அதில் கூறி இருக்கும் 64 கதைகளில் வெறும் நான்கு மட்டும் தான் படமாக்கப்பட்டது.

    16-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலில் குறுந்தொகையில் உள்ள பாடல்குறிப்பிடப்பட்டதா? அல்லது திருவிளையாடல் படத்திற்காக A.P. நாகராஜன் அவர்கள் குறுந்தொகையில் உள்ள பாட்டை உபயோகப் படுத்திக் கொண்டாரா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. சரி அதையும் தான் தேடிப் பார்த்துவிடுவோமே என்று தேடினேன். ரொம்ப நேரம் ஆகவில்லை, திருவிளையாடல் புராணம் முழுவதும் இணையதளத்தில் கிடைத்தது. அதில் சற்று பொறுமையாக தேடியதில் கீழ்க்கண்டவற்றை கண்டறிந்தேன்:

தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் வரும் பாடல்:

தென்னவன் குல தெய்வம் ஆகிய 
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ் 
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார் 
இன்னல் தீர்த்து அவன் இறைஞ்சி வாங்கினான்.

ஆம். திருவிளையாடல் புராணத்தில் 'கொங்கு தேர் வாழ்க்கை' பாடலை சிவன் தருமிக்கு அளித்ததாக கூறப்பட்டிருக்கிறது. குறுந்தொகையில் இந்தப் பாடலை எழுதியவர் பெயர் என்ன தெரியுமா? 'இறையனார்'.

சிவனுக்கும் கீரனுக்கும் அமைந்த வாக்குவாதம் முழுவதும் இந்த நூலில் இருக்கிறதா என்று தேடினேன். அதன் விளவு இதோ:

ஆரவை குறுகி நேர் நின்று அங்கு இருந்தவரை நோக்கி 
யாரை நங் கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா முன்னம் 
கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற 
சீரணி புலவன் குற்றம் யாது எனத் தேராக் கீரன்.

சொல் குற்றம் இன்று வேறு பொருள் குற்றம் என்றான் தூய 

பொன் குற்ற வேணி அண்ணல் பொருள் குற்றம் என்னை என்றான் 
தன் குற்றம் வருவது ஓரான் புனைமல்ர்ச் சார்பால் அன்றி 
அல் குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்.

பங்கய முக மென் கொங்கைப் பதுமினி குழலோ என்ன 

அங்கு அதும் அனைத்தே என்றான் ஆலவாய் உடையான் தெய்வ 
மங்கையர் குழலோ என்ன அன்னதும் மந்தாரத்தின் 
கொங்கலர் அளைந்து நாரும் கொள்கையால் செய்கைத்து என்றான்.

பரவி நீ வழிபட்டு ஏத்தும் பரம் சுடர் திருக்காளத்தி 

அரவு நீர்ச் சடையார் பாகத்து அமர்ந்த ஞானப் பூங்கோதை 
இரவி நீர்ங் குழலும் அற்றோ என அ•தும் அற்றே என்னா 
வெருவிலான் சலமே உற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்.

கற்றை வார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப் 

பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல் ஆகம் 
முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம் 
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான். 

தேய்ந்த நாள் மதிக் கண்ணியான் நுதல் விழிச் செம் தீப் 

பாய்ந்த வெம்மையில் பொறாது பொன் பங்கயத் தடத்துள் 
ஆய்ந்த நாவலன் போய் விழுந்து ஆய்ந்தனன் அவனைக் 
காய்ந்த நாவலன் இம் எனத் திரு உருக் கரந்தான். 

    சிவாஜி உள்ளே வந்து 'என் பாட்டிற்கு குற்றம் கூறியவன் எவன்?'  என்று கேட்பதில் இருந்து 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் வரையில் அனைத்து வசனங்களும்  இந்த பாடல்களில் இருந்தே எழுதப் பட்டிருக்கின்றன. எனக்கு பாடல்கள் அனைத்தும் புரியவில்லை என்றாலும் வசனங்கள் தெரிந்திருந்ததால் எனக்கு புரிந்தவற்றை உயர்த்திக் காட்டியுள்ளேன். 



    ஆனால் அதன் பிறகு நடக்கும் வாக்குவாதம், அதாவது சிவன் கீரனைப் பார்த்து 'கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்' என்று கூறுவது(மயிர்கூச்செரியும் தருணம்) இங்கே இல்லை. அந்த வசனம்:

சிவன்(சிவாஜி): 
அங்கம் புழுதிபட அரிவாளில் நெய் பூசி 
பங்கம் படவிரண்டு கால் பரப்பி - சங்கதனை 
கீர்கீர் என அறுக்கும்  நக்கீரனோ எம்கவியை 
ஆராய்ந்து சொல்லத் தக்கவன் ?

கீரன்(APN):
சங்கறுப்பது எங்கள் குலம் 
சங்கரனார்க்கு ஏது குலம்? - சங்கை 
அரிந்துண்டு  வாழ்வோம் அரனே உம்போல் 
இரந்துண்டு வாழ்வதில்லை!!!

    இதற்குப் பிறகு தான் நக்கீரா!!! என்று கர்ஜித்து சிவன் கீரனை எரிப்பார். இந்த வசனத்தை திரைப் படத்திற்காக எழுதினார்களா? அல்லது இதுவும் இலக்கியத்தில் இருக்கும் பதிவா? என்று மற்றுமொரு சந்தேகம் எழுந்தது. மீண்டும் தேடினேன். ஆம் இலக்கியத்தில் இருக்கும் பதிவு தான் இதுவும். தவிர இந்த வசனத்திற்கும் பொருள் இது வரை தெரியாது. இப்போதுதான் அதையும் அறிந்து கொண்டேன்.

    'தனிப்பாடல் திரட்டு' என்ற ஒரு தொகுப்பு நூலில் இந்த பாடல்கள் அமைந்துள்ளது. அந்த பாடல்கள் இதோ:

அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப் 
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக் 
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப் 
பாரில் பழுதுஎன் பவன் 

சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரர்க்கு அங்கு எதுகுலம்

பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை 
அரிந்துண்டு வாழ்வோம்  அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வோம் ...   

    இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால், 'சங்கை அரிந்து அதிலிருந்து வளையல் செய்யும் குலத்தைச் சேர்ந்த கீரன் என் பாடலை பிழை என்று சொல்வதா' என்று சிவன் கேட்கிறார். 'சங்கை அரிந்து வளையல் செய்யும் குலம் எங்கள் குலம் , அந்த சங்கில் பிச்சை எடுத்து வாழ்பவர் சிவனாகிய நீர்' என்று கீரன் கூற சிவன் கோவப்பட்டு எரிப்பதாக படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் இருந்து நான் அறிந்தது, அந்த ஒரு காட்சிக்காக எவ்வளவு ஆராய்ச்சிகள் அந்தப் படத்தின் வசனகர்த்தா செய்துள்ளார் என்பது ஒன்று. மற்றொன்று சங்கை அறுத்து வளையல் செய்யும் குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கவி பாடுவதில் வல்லவராக இருந்த நக்கீரரை எந்தப் பாகுபாடின்றி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக நியமித்துள்ளனர்  பாண்டிய மன்னர்கள் என்பது. சங்க காலத்தில் பிறந்த குலத்திற்கும் அடையும் பதவிக்கும் சம்மந்தம் இருந்திருக்க வில்லை என்று இதன் மூலம் நாம் நம்பலாமா?

    இவ்வளவு காலம் எனக்கு பிடித்த ஒரு காட்சி, நூற்றுக்கும் மேற்பட்டு நான் கண்டும் கேட்டும் வியந்த காட்சிக்குள் இவ்வளவு தகவல்கள் இருப்பது தெரியாமல் இருந்திருக்கிறதே என்று வியப்பாக உள்ளது. உங்களில் பலருக்கும் இந்த விவரங்கள் புதுமையாக இருக்குமாயின் இது ஸ்வாரஸ்யமான தகவலாக விளங்கும் என்று நம்புகிறேன்.

Friday, April 10, 2020

ஊரடங்கின் மத்தியில் தமிழ் கல்வி 1 : Bauhinia tomentosa

    என்னடா! தமிழ் கல்வி என்று எழுதிவிட்டு ஆங்கிலத்தில் ஏதோ அறிவியல் பெயர் எழுதி இருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? எல்லாம் உங்கள் ஆர்வத்தைத் தூண்டத்தான்.

    கரோனா-வினால் ஊரடங்கு ஆரம்பித்த நாள்முதல் என் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ளத் தோதான ஒரு நடவடிக்கையை தேடிக் கொண்டிருந்தேன். நூல் வாசிப்பதில் எனக்கு ஆர்வமிருந்ததால் சில காலம் அதில் கடந்தது. ஒவ்வொரு புத்தகம் முடித்த பிறகும் அடுத்து என்ன படிப்பது என்ற ஒரு குழப்பம் ஏற்படுமல்லவா? அப்படியான ஒரு குழப்பத்தின் விடையாக ஔவையார் பாடல்கள் படிப்பது என்று தீர்மானித்தேன்.

    ஔவையார் என்றாலே நமக்குத் தோன்றும் பாடல்கள் 'ஆத்திசூடி' தானே. ஆத்திசூடி-யில் அனைத்துப் பாடல்களும் நமக்கு தெரிந்திராவிட்டாலும் 'அறம் செய விரும்பு' மட்டுமாவது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் பள்ளியில் ஆத்திசூடி-யில் படித்தது வெறும் பன்னிரண்டு பாக்கள் தானே? ஆனால் மொத்தம் 109 பாக்கள் உள்ளன என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

   ஒவ்வொரு பா-வையும் இங்கு விளக்கி உங்களை சலிப்பூட்டப் போவதில்லை. இணையத்தில் தேடி நீங்கள் படித்துக் கொள்ளலாம் (ஆர்வமிருந்தால்). Bauhinia tomentosa-வுக்கு வருவோம் இப்பொழுது.


    ஆத்திசூடி-யின் பெயர்க்காரணம் என்ன தெரியுமா? நம் பள்ளிக் காலத்தில், நாம் படித்த அனைத்து செய்யுள்களுக்கும் முதன்மையாக 'கடவுள் வாழ்த்து' என்று இருந்தது ஞாபகம் இருக்கிறதா? அப்படி இந்த 109 பாக்களுக்கும் ஔவையார் எழுதிய கடவுள் வாழ்த்து இதோ:

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


    இந்த கடவுள் வாழ்த்தின் முதல் இரண்டுவார்த்தைகளில் இருந்தே இதன் தலைப்பையும் 'ஆத்தி சூடி' என்று வைத்திருக்கிறார்கள். ஔவையார் வைத்தாரா? அல்லது இந்த நூட்களை பிற்காலத்தில் சேகரித்தவர்கள் வைத்தார்களா என்பது தெரியாது.

    இந்த கடவுள் வாழ்த்தின் அர்த்தம்:

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

    'அது என்ன திருவாத்தி பூ?' என்று நான் தேடியபோது தான் அந்தச் செடியின் அறிவியல் பெயரான Bauhinia tomentosa-வை அறிந்தேன். அதன் ஆங்கில பெயர் 'Yellow bell orchid tree'. நம் ஊரில் கூட சில இடங்களில் இந்த மரங்களை நீங்கள் பார்க்க நேரிடலாம்.

    'ஆத்தி சூடி' பற்றி இந்த தகவல்கள் எனக்கு சுவாரஸ்யமாகத் தோன்றியது. இதுவரை நீங்கள் படிக்கிறீர்களானால் உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். அல்லது 'கரோனா நேரத்தில் இது ரொம்ப முக்கியமா?' என்று கேட்டீர்களானால் உங்களுக்கு மற்றும் ஒரு துணுக்கு. இந்தத் திருவாத்தித் தாவரம், அதாவது Bauhinia tomentosa நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நுண்ணுயிரியை பெற்றுள்ளது. அதனால் திருவாத்தி-யை பார்த்தால் ஔவையார்-ஐ நினைத்துக் கொண்டு அதன் இலைகளையும் பூக்களையும் மென்று உண்ணுங்கள். 

   உண்ட பிறகு ஔவையார் பாடல்களையும் படியுங்கள். திருக்குறள் போல ஔவையார்-இன் பாடல்களும் நீதி நூல்களே.

Sunday, March 29, 2020

படித்ததில் பாதித்தது - அமரர் எஸ். எஸ். வாசன் நூற்றாண்டு மலர்




    விகடன் ஏற்பாடு செய்திருந்த 'வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' சுற்றுலா-வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசாக இந்த புத்தகத்தை அளித்தார்கள். வாசன் அவர்களுடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள், தொழிலாளிகள், சினிமா நட்சத்திரங்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும் திரு. வாசனைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். வாசன் அவர்களின் 100-வது பிறந்தநாளை 2004-இல் கொண்டாடிய போது வெளியிடப்பட்டது.

    திரு.வாசன் அவர்களைப் பற்றி வெறும் மேலோட்டமாகவே அதுவரை எனக்குத் தெரிந்திருந்தது. இந்த புத்தகம் மூலமாக அவரைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவரை அவருடைய தாயார்தான் கடும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார். அவர் தாயின் மீது அவருக்கிருந்த பாசமும் பக்தியும் புத்தகம் முழுவதும் பல பேரால் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. கடைசி வரை தாய் சொல்லைத் தட்டாமல், தாயை மதித்தவன் கண்டிப்பாக வாழ்க்கையில் உயருவான் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ளார்.

    இளம் வயதில் தந்தை பெரியாரின் பத்திரிக்கைக்கு விளம்பரங்கள் சேர்த்துக்கொடுப்பது, வி.வி.பி மூலம் 1 ரூபாய்க்கு 144 பொருள்கள் என்று மெயில் ஆர்டர்-இல் விற்பனை செய்தது, அச்சகத்தில் வேலை பார்ப்பது என்று தொடங்கி 1928-இல் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆனந்த விகடனை வாங்கி இருக்கிறார். அதன் பிறகு ஆனந்த விகடனை முற்றிலுமாக அவர் மாற்றிய விதம், சந்தாதாரர்களை அதிகப்படுத்த அவர் கையாண்ட உபாயங்கள், சுழற்சியை அதிகப்படுத்த அறிமுகப்படுத்திய போட்டிகள், பந்தயங்கள், நகைச்சுவை ரசம் ததும்பிய அரசியல் செய்திகள் என்று அவ்வளவும் அந்தக்காலத்திற்கு முற்றிலும் புதுமை. நல்ல எழுத்தாளர்களைத் தேடித் தேடி விகனில் எழுத வைத்திருக்கிறார். அப்படி கண்டுபிடிக்கப் பட்டவர்களில் சிலர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர். கே. நாராயணன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியவர்கள்.

    விகடனில் கதைகளை திருத்துவது, தொகுப்பது மூலமாக கற்றுக்கொண்ட விஷயங்களை கூடிய சீக்கிரம் சினிமாவில் பயன்படுத்துகிறார். அவருடைய வியாபாரத் தந்திரம், விளம்பரப் படுத்துதலில்  அவருக்கிருந்த சாதுர்யம், எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல், கடும் உழைப்பு மூலமாக சினிமா துறையில் நுழைந்து விநியோகத்தில் ஆரம்பித்து, 1940-இல் ஜெமினி ஸ்டுடியோஸ் தொடங்கி தயாரிப்பு, இயக்கம் என்று அனைத்துத்  துறைகளிலும் தேர்ச்சி அடைந்திருக்கிறார். பிறகு ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்தது வெறும் படங்கள் மட்டும் அல்ல, சரித்திரங்கள்.

    கல்கியின் 'தியாகபூமி' திரைப்படமாக எடுக்கப்பட்ட பொழுதே விகடனில் தொடராகவும் வெளியாகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் கதைக்கான வரைப்படங்கள் போடுவது வழக்கம். ஆனால் தியாகபூமி-க்கு ஷூட்டிங்-இல் இருந்து எடுக்கப்பட்ட சினிமா போட்டோ-களையே போட்டுள்ளார். சினிமாவுக்கு விளம்பரமும் ஆச்சு அல்லவா!

    'சம்சாரம்' படத்திற்கு ரேஷன் கார்டு லிஸ்ட்-இல் இருந்து முகவரிகளை சேகரித்து, அனைத்து மகளிருக்கும் படத்தின் முன்னணி கதாபாத்திரமே  தன்  கதையை வந்து பார்க்குமாறு கடிதம் எழுதுவது போல் கடிதம் எழுதி விளம்பரம் செய்துள்ளார்.

    'சந்திரலேகா' இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.தன் சொத்துக்கள் அனைத்தையும் அந்த திரைப்படத்தில் செலவிட்டுள்ளார். கிளைமாக்ஸ் டிரம்ஸ் காட்சி மட்டும் 2 மாதங்கள் படமாக்கப் பட்டிருக்கிறன்றன. அது படமாக்கப்பட்ட விதத்தைப்  படித்தால் வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள். சில காட்சிகளை மட்டும் ஹிந்தியில் எடுத்து, டப் செய்து ஹிந்தியில் வெளியிட அங்கும் பெரிய ஹிட். தென்னிந்தியாவில் இருந்து இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய முதல் படம். அந்த படத்தின் வெற்றி தான், பின் ஏவிஎம், பி.நாகிரெட்டி அனைவரும் ஹிந்தி சினிமாவுக்குள் நுழையக் காரணமாக இருந்தது என்று அவர்களே கூறி இருக்கிறார்கள்.

    பின் மற்றுமொரு பிரம்மாண்ட படைப்பான 'ஒவ்வையார்'. ஒவ்வையார் கிளைமாக்ஸ்-காக யானைகளை தேடி அலைந்து நடிக்க வைத்தது மற்றுமொரு வியக்கத்தகும் பெரும்கதை. ஒவ்வையார் விளமபரத்திற்கு பட ரிலீஸ் அன்று அணைத்து தியேட்டர் முன்பும் கோவில் கோபுரம் போல் செட் போட்டுள்ளார். படம் பார்த்து விட்டு ரசிகர்கள் திருநீர் குங்குமம் கூட வாங்கிப் போயிருக்கின்றனர்.

    சந்திரலேகா-விற்குப் பிறகு ஹிந்தி-யிலும் பல படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். திலிப் குமார், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், என்று இந்தியாவின் பல மொழிகளின் சூப்பர்ஸ்டார்களும் ஜெமினி நிறுவனத்தின் படத்தில நடிக்க வேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு, ஜெமினி ஸ்டுடியோஸ் இந்தியா முழுவதும் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் வந்தால் கூட அவர்கள் காண விரும்பும் இடங்களில் ஜெமினி ஸ்டுடியோஸ் கண்டிப்பாக இருந்திருக்கிறது.

    அவருடைய perfectionism பற்றியும் கூறியே ஆக வேண்டும். பிரிவியூ ஷோ-வில் ஒரு படத்திற்கு 31 இடங்களில் கைத்தட்டு வரும் என்று அவர் கூறி, 30 இடங்களில் மட்டும் கைத்தட்டு வர, வராத அந்த ஒரு சீனை ஆராய்ந்து சில மாற்றங்கள் செய்து மறுபடியும் வெளியிட்டிருக்கிறார். ஆம் 31-ஆம் கைத்தட்டு வந்தது இம்முறை. சந்திரலேகா படத்தை வாங்க வந்த கேரள விநியோகஸ்தர் ஒருவர், 'சர்க்கஸ் சீனில் நடிகை தொடை தெரிகிறது, அதை கட் செய்ய வேண்டும்' என்று கூற, அதற்கு மறுத்து 'என் படத்தை எந்த மாற்றமும் இல்லாமல் தான் திரையிட வேண்டும்' என்று ஒப்பந்தத்திலும் சேர்க்கச் சொல்லி இருக்கிறார்.

    திறமையாளிகளை ஊக்குவிப்பதில் வாசனுக்கு நிகர் வாசன் தான். 1960-களில் வியட்நாம் போர் குறித்த ஒரு கட்டுரை வாசனுக்கு மிகவும் பிடித்துப்போகவே, கட்டுரைக்கான 150 ரூபாய் செக்-ஐ நிறுத்தச் சொல்லி விட்டு, தானே அந்த எழுத்தாளருக்கு ஒரு செக் அனுப்பி உள்ளார். அந்த செக்-இல் இருந்த தொகை நான்காயிரத்து ஐநூறு. ஒரு படத்திற்கான நீர்வீழ்ச்சி சீன்-களை ரஷ் பார்க்கும்பொழுது சீன்-கள் அனைத்தும் சரி இல்லாமல் மீண்டும் ஷூட்டிங் போகவேண்டும் என்று அனைவரும் சொல்ல, அங்கு இருந்த ஒருவர் மட்டும், 'இது கேமரா தவறு அல்ல, பிரின்டிங் தவறு' என்று சுட்டிக்காட்ட, மீண்டும் பிரிண்ட் செய்தபோது சீன்-கள் ஒழுங்காகவே இருந்திருக்கிறது. உடனே ஸ்பாட்-இல் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருக்கார்(மீண்டும் ஷூட்டிங் போயிருந்தால் 70 ஆயிரம் செலவு ஆகி இருக்கும்).

    எழுத்தாளர்கள் மீது அவருக்கு அளவு கடந்த மரியாதை. எழுத்தாளர்களைப் பற்றி திருச்சியில் ஒரு முறை ஆற்றிய சொற்பொழிவைப் படித்தால் எழுத படிக்க தெரியாதவனுக்குக் கூட எழுத ஆசை வரும். ஒரு முறை விகடன் ஆபீஸ்-இல் கல்கி-யின் அறைக்குச் சென்ற வாசன் கல்கி யோசனையில் ஆழ்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு தான் வந்தது அறிவிக்காமலே அரை மணி நேரம் வெளியில் காத்திருந்திருக்கிறார். விகடனில் பிரசுரமான எந்த கதைக்கும் காப்பீட்டுத் தொகை, சினிமா உரிமைத் தொகை  என்று அனைத்தையும் அந்த எழுத்தாளருகே அனுப்பி வைத்திருக்கிறார்(விகடனில் வெளியானதால் கதைகள் விகடனிற்குத்தான் சொந்தம்).

    அவர் படங்களைப் போலவே அவர் மகளின் திருமணத்தையும் 4 நாட்கள் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார். அனைத்து மக்களுக்கும் உள்ளே அனுமதி தர, நான்கு நாட்கள் போதாது என்று மீதும் 10 நாட்கள் நீட்டித்திருக்கிறார் .

    எடுத்த எந்த விஷயத்தையும் தெரிந்தே செய்திருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம்: குதிரை ரேஸ் பிரியரான வாசன் மும்பை-இல் நடந்த ஒரு ரேஸ்-இல் அவர் பந்தயம் கட்டிய குதிரை தோற்றுள்ளது. அவர் கணிப்புப் படி அந்த குதிரை ஜெயிக்க கூடியது என்று அவர் நம்பி இருந்தார். ரேஸ் முடிந்ததும், தோற்ற அந்த குதிரையை விலைக்கு வாங்கி பூனே எடுத்துச் சென்று குதிரை மற்றும் சவாரி செய்பவனுக்கு பயிற்சி கொடுத்து மீண்டும் அந்த குதிரையை மும்பை-கு எடுத்துச் சென்று பந்தயத்தில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.

    இப்படி பக்கத்துக்கு பக்கம் அவரைப் பற்றிய விந்தையான, நம்பமுடியாத, பிரமிக்க வைக்கும்  செய்திகள் குவிந்துள்ளன இந்த புத்தகத்தில். இந்தப் புத்தகம் படிக்கும் எவருக்கும் இப்படி ஒரு 'பாஸ்'-இடம் வேலை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் வரும். அப்படி யாராவது வேலையை விட்டுவிட்டு விகடன்-இல் சேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.எழுத்தாளர், பத்திரிகையாளர், படத் தயாரிப்பாளர், இயக்குனர், தொழிலதிபர், முதலாளி, விளம்பர மேதை என்று பல்துறை வல்லுனராக  வாழ்ந்துள்ளார் திரு.வாசன் அவர்கள். அவர் தமிழ் நாட்டிற்கும், இந்திய/தமிழ் சினிமாவிற்கும், தமிழ் பத்திரிகைக்கும்  எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும் அமுதசுரபியாக இருந்துள்ளார். நான் இங்கு கூறியது ஒரு பருக்கை தான். 

Thursday, February 6, 2020

hIgh school hIstory - Episode 7 - Mystery Sweet

    For Pongal Festival, I didn't get any holiday in Pune. So I didn't go to my hometown and had to stay in Pune itself. On Makar Sankranti, as its called here, I was invited to my wife's relatives place as they made some special dinner. I asked my wife first what exactly was made as part of that special dinner, as I was a little afraid that I won't like the food. She said it's some sweet made of some millet and we need to mix it with banana pieces and eat. Her vagueness of the description didn't do anything to reduce my fear. As I expected, it turned out to be horrible, at least for me. It was sweet, but not edible after 2, 3 spoons. I struggled and had 3 more spoons then gave up. This incident reminded me of a similar incident in my High school hostel, except there i couldn't simply escape from it. And the incident below:

Flashback(2002-2004): Mystery Sweet

         To know a little background about our high school hostel mess, refer the episode 3 blog. Almost all the dishes served in our mess was horrible. Any dish which tastes a little better won't be served the second time. Most of those dishes would be a sweet or snack served during festival days( if you're wondering why we didn't go home for festival days, you didn't read any of any previous blogs). On one such occasion, i don't exactly remember what festival it was, we were served a mystery sweet during our dinner. It looked like upma, but a sweet, but not kesari. It was somewhere between upma and kesari. We were a little surprised that a sweet was being served for dinner. 

      It was served before main course and once the guys in first line tasted, we could see a delightful surprise in their face. Immediately all the guys from the lines behind asked the guys from first line how the dish tastes. The feedback was amazing. They said its awesome and all the guys were happy and waiting to be served that wondrous dish. When the dish was being served in the 3rd and 4th lines, the guys from 1st and 2nd lines who didn't even finish the first serving, inserted their plates in the other lines asking for the 2nd serving. Even though everybody knew we won't be served 2nd time any dish that tastes good, they were being greedy and took a chance. To everybody's surprise, they were served the 2nd time. Everybody was so happy, they can't believe what was happening. Then every body asked for more and more and got their plates full of this mystery sweet. None of the plate had any place for main course.

     But soon our happiness was short-lived. After we had 3-4 spoons of that dish, we couldn't eat any further. It was the kind of sweet you can't eat after 3-4 spoons. Too much cardomom or cinnamon, don't know what the hell they put that in that. We started getting vomiting sensation when we tried to eat any more of that. Everybody was looking around each other to make sure we were not the only ones feeling that way. Only good news was everybody was feeling the same way and soon we were cursing the dish. Everyone started whining as "What in the devil's name is this?", "I wondered why they were serving 2nd time", "I'm about to vomit da, i can't take any more of this" etc etc.

     Few people started getting up to throw the food in the trash and headed out of the mess. One more thing to tell you here is that sometimes in our mess, our wardens and tutors would be standing outside between the mess and the place with all the taps where we wash our plates and hands and mostly throwing away the leftover foods. On that particular fateful day, it turned out they were standing outside and not letting anyone waste the food and sent back initial batch of students back to mess to finish whatever is left in their plates. They probably tasted the dish before us and decided to give their sadist mind some fun. 

   Now we were all stranded inside that island called 'mess' with this thing in our plate, as our wardens and tutors are roaming outside like crocodiles and the only way to get past them is with an empty plate. We were all simply sitting and looking at each others faces crying and laughing in that shared sorrow. Every few minutes we would try to swallow another spoon of that thing and fail miserably. It was getting late and everybody tried to find a way to get past the crocodiles (wardens/tutors) outside. Few students had milk coupons and a cup with them to get milk outside the mess after dinner. They stuffed as much of that thing from the plate into that cup and hid it by keeping it under the plate and got past the crocodiles. Rest of us begged them to come back and give their cups to us so we can also escape in similar fashion.

   But the number of students with cups was very less compared to the students without them. So it was enough for everyone to depend on the same escape route. Desperate situations lead to desperate measures. Some students stuffed that thing in their pant and shirt pockets and escaped and trashed them after crossing the crocodiles. Some even stuffed in their mouth without swallowing and walked fast past the crocodiles and spit out and vomited in trash after that. Some of us waited for survivors to return with cups and some simply waited for crocodiles to get bored and leave their positions. 

   After couple hours of struggle we all survived that ordeal and learned a lesson to never ask for 2nd serving with the desire for taste in that mess and probably a life lesson that don't trust anything which comes easy in life. And thankfully that dish was never served again for our entire stay there.



Links to all hIgh school hIstory blogs:
Episode 7
Episode 6
Episode 5
Episode 4
Episode 3
Episode 2
Episode 1

Thursday, January 2, 2020

2019 புத்தகங்கள் - ஒரு பின்னோக்கம்

கடந்த 3 வருடங்களாக நான் புத்தகங்கள் படிப்பதற்காக goodreads இணையதளத்தில் எனக்கு நானே சவால் வைத்துக்கொள்வது வழக்கம். என் சோம்பேறித்தனத்தை கடந்து செல்லவே இப்படி ஒரு முயற்சி. 2019-ல் 40 புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று சவால் வைத்துக்கொண்டேன். அனால் வெறும் 23 மட்டுமே படிக்க முடிந்தது. அந்த 23 புத்தங்கள் பற்றி இதோ:

1. மூன்று நாள் சொர்க்கம் - சுஜாதா
   
ஆண்டு தொடங்கும்பொழுதே சீக்கிரமாக ஒரு புத்தகத்தை முடித்து எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்து சுஜாதா-வின் சிறிய குறுநாவல் 'மூன்று நாள் சொர்க்கம்' படித்து முடித்தேன். சுஜாதா-வின் மற்ற குறுநாவல்களை விட இது  சற்று சுமார் என்றே சொல்ல முடியும்.

2. Rip Van Winkle - Washington Irving

ஒரு புத்தக வாசிப்பாளர்கள் வலைப்பதிவின் மூலம் 'Rip Van Winkle' என்ற அமெரிக்க சிறு கதைப் பற்றி அறிந்தேன். அமெரிக்க சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தில் ஒரு மனிதன் மர்மமான மலைப்பகுதி ஒன்றில் 20 வருடங்கில் தூங்கிவிடுகிறான். பின் அவன் கண் விழிக்கையில் அமெரிக்க சுதந்திரம் அடைந்து பல மாற்றங்கள் கண்டு விடுகிறது. அந்த கால மற்றும் கலாச்சார மாற்றத்தை சற்றே நகைச்சுவையோடு கூறிய ஒரு கற்பனை கதை.


3. மீண்டும் ஜீனோ - சுஜாதா

சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' படித்த பிறகு, 1980-களில் இப்படி ஒரு அறிவியல் புனைக்கதையை எப்படி எழுதினார் என்று நினைத்து வியந்தேன். அதனுடைய தொடர் நாவலான 'மீண்டும் ஜீனோ' என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே அமைந்தது. ஜீனோ என்கிற எந்திர நாய் நிச்சயமாக  உங்கள் உள்ளங்களை கவர்ந்து விடும்.


4. The Alienist - Caleb Carr

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடக்கின்ற கோரமான தொடர் கொலைகள் பற்றிய திரில்லர் நாவல். மிகவும் சிக்கலான, இடர்ப்பாடுகள் மிகுந்த நாவல். திரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், சற்று மன உறுதியுடன் படித்தால்.

5. வந்தார்கள் வென்றார்கள் - மதன்

11-ஆம் நூற்றாண்டில் தொடங்கி முகலாய ராஜாங்கம் வரை, டெல்லி மீது படையெடுத்த அதனை வெளிநாட்டவர்கள் பற்றியும், அவரகள் செய்த கொடும்போர், ஆட்சி முறைகள், உட்பூசல்கள் என்று அனைத்தையும் ஸ்வாரஸ்யத்துடன் 200 பக்கங்களுக்குள் சொல்லி இருக்கிறார் மதன். இந்திய வரலாறு மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு விறுவிறுப்பான வாசிப்பாக அமையும்.

6. The Ramayana - R K Narayan

இராமாயணத்தை சுருக்கமாகவும் எளிமையாகவும் எடுத்துக் கூறி இருக்கிறார் ஆர். கே. நாராயன். இராமாயணம் பற்றி அறியாதவர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

7. Manto 'Selected Short Stories' - Saadat Hasan Manto

இந்திய/பாகிஸ்தான் எழுத்தாளர் மண்டோ-வின் சிறுகதைத் தொகுப்பு இது. 2019-ல்  நான் படித்ததில் மிகச்சிறந்த புத்தகம் இது என்றால் மிகை ஆகாது. மண்டோ-வின் ரசிகனாக ஆகி விட்டேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின் போது நடந்த வன்முறைகள், கற்பழிப்புகள், கொலைகள் பற்றி பல சிறுகதைகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தான், இந்து முஸ்லீம் என்று எந்தவொரு பிரிவினருக்கும் வக்காலத்து வாங்காமல், அந்த பிரிவு சாமான்ய மக்களை எப்படி பாதித்தது என்று மக்களின் கண் வழியாகவே கதைகள் அமைந்துள்ளன. ஒரு சிறுகதை இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? இவ்வளவு வலிகளையும் காயங்களையும் விவரிக்க முடியுமா? என்று பல கதைகள் என்னை வியக்க வைத்தன.

8. Three Women - Rabindranath Tagore

ரபீந்திரநாத் தாகூர்-இன் 3 குறு நாவல்களின் தொகுப்பு. மூன்றும் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்டவை. மூன்றில் எனக்கு பிடித்தமான கதை 'The Broken Nest'. சத்தியஜித் ரே-வால் 'சாருலதா' என்ற பெயரில் படமாக்கப் பட்டு மிகுந்த வரவேற்பும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

9. ஹாய் மதன் - பாகம் - 2 - மதன்

கேள்வி பதில் புத்தகங்கள் பெரும்பாலும் காலத்தை கடக்க மட்டுமே உதவுகின்றன. எந்த கேள்வியும் பதிலும் மனதில் நிற்பதில்லை. அதனால் என்னுடைய சவாலில் ஒரு எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள மட்டுமே இதை படித்தேன் என்று குற்ற உணர்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

10. The Mahabharatha - R K Narayan

மகாபாரதம் எளிமையாகவும், சுருக்கமாகவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மகாபாரதம் பற்றி நான் ஏற்கனவே நிறைய படித்திருந்ததால், இதில் புதிதாக எதுவும் இல்லை.

11. Conversations with Mani Ratnam - Baradwaj Rangan

இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது என்பதே எனக்கு தெரிந்திருக்க வில்லை. எதேச்சையாக நூலகத்தில் உலாவிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்டது. பார்த்த உடனே எனக்கு தெரியும் நான் இதை 2 நாட்களில் படித்து முடித்து விடுவேன் என்று. மணிரத்னம் படங்களின் ரசிகர்களுக்கு இது ஒரு தேநீர் விருந்து போல.

12. Animal Farm - George Orwell

ரஷ்யப் புரட்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட நையாண்டியான நாவல். மிருகங்களை வைத்து நையாண்டித்தனமாக அமைந்திருந்தாலும், புரட்சி, போரட்டம், தலைவர்கள், தொண்டர்கள், பதவி, சுரண்டல்கள் என்று அணைத்து அரசியல் அம்சங்களைப் பற்றியும் சிந்திக்க வைக்கும் புத்தகம்.

13. The Name of the Rose - Umberto Eco

இத்தாலிய இலக்கியத்தில் பெரிதும் போற்றப்படும் புத்தகம் இது. 14-ஆம் நூற்றாண்டில் ஒரு கிறிஸ்தவ சர்ச்-ல் நடக்கும் மர்ம கொலைகளை பற்றிய நாவல். மேல்நோக்காக பார்க்கையில், ஒரு திரில்லர் நாவல் எனப்பட்டாலும், இந்த புத்தகத்தில் பல விஷயங்கள் குறித்து பேசப்படுகின்றன. 14-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாறு, அன்றைய மன்னர்களுக்கும் கத்தோலிக்க சர்ச்-இன் போப்-க்கும் இடையே இருந்த கருத்து  வேறுபாடுகள், பைபிள்-இல் கூறப்பட்ட கதைகளின் உள் அர்த்தங்கள், அதை எப்படி பல்வேறு குழுவினர் பல்வேறு விதமாக புரிந்து கொண்டார்கள், அப்படி புரிந்து கொண்டதால் கிறிஸ்தவ மதத்தில் ஏற்பட்ட பிளவுகள் என்ற பல அடுக்குகளில் கதைக்களம் அமைந்திருந்தது. பைபிள், ஐரோப்பிய வரலாறு பற்றி எனக்கு முன்னறிவு ஏதும் எனக்கு இல்லாததால் இதை படிப்பதற்கு சற்று சிரமமாகவே இருந்தது.

14. Shikhandi and Other Tales - Devdutt Pattanaik

அம்பை-யாக பிறந்து பீஷமரை கொள்வதாக சபதம் செய்து, மறுபிறவியில் திருநங்கையாக சிகண்டி(னி) என்ற பெயரில் பிறந்து பீஷ்மரின் இறப்புக்கு காரணமாக இருந்த கதையோடு, மற்ற பல புதிரான, விந்தையான, ஆண்-பெண் பாலின உறவுகள், மாற்றங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்.மகாபாரதம் மட்டுமன்றி, மற்ற புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புற கதைகள் என்று பலவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகள், கட்டுரைகள் கொண்ட புத்தகம்.

15. Maharani - Ruskin Bond

வாழ்ந்து கெட்ட ராஜாங்கத்தின் கடைசி மகாராணி-யின் கடைசி நாட்கள் குறித்தும், அவருடனும், அவரது குடுமபத்தினருடனும்  எழுத்தாளர் கொண்ட நட்பு குறித்தும் எழுதப்பட்ட நாவல். ரஸ்கின் பாண்ட்-இன் மற்ற புத்தகங்கள் போலவே முசூரி மலைப்பகுதியில் நடக்கும் கதை.

16. The City of Brass - S A Chakraborthy

அலாவுதீன், அலி பாபா கதைகளில் நாம் பார்த்த பூதங்களுக்கு வேறு ஒரு பரிமாணம் அளித்து அவர்களின் வரலாறு, மந்திர தந்திரங்கள், போர்கள் என்று ஒரு கற்பனை உலகை படைத்து அதில் ஒரு பெண்ணை முதன்மைப் பாத்திரமாக வைத்து எழுதியுள்ளார் பெண் எழுத்தாளர் ஷான்னோன் சக்ரபர்த்தி.

17. ஜெயகாந்தன் சிறுகதைகள் - ஜெயகாந்தன்

10 கதைகள் கொண்ட தொகுப்பு. ஆனால் ஜெயகாந்தனின் சிறந்த படைப்புகள் இதில் இருந்ததாக தெரிய வில்லை. சில கதைகள் காலம் கடந்து விட்டதால் சாதாரணமாக தெரிந்ததோ என்னவோ.

18. முதற்கனல் - ஜெயமோகன்

மீண்டும் மஹாபாரதம். பல்வேறு எழுத்தாளர்கள் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் எழுதி இருக்க, அணைத்து கதாபாத்திரங்குளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முழு மகாபாரதத்தையும் 'வெண்முரசு' என்கிற நாவல் வடிவமாக எழுதிக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். அதன் முதல் புத்தகம் தன் 'முதற்கனல்'. தற்போது 23-வது புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறன். அணைத்து புத்தகங்களும் இலவசமாக அவருடைய இணையதளத்தில் உள்ளன.
'முதற்கனல்' அற்புதமான ஆரம்பம். அடுத்தடுத்த புத்தகங்களை படிக்க ஆர்வமாக உள்ளேன்.

19. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்-இன் மைல்கல் என்று சொல்லலாமா இந்த நூலை? அல்லது தமிழ் நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று சொல்லாமா? கங்கா என்கிற கதாபாத்திரத்தை அவர் எப்படி எழுதினார் என்பது பெரும் வியப்பு. ஒரு ஆண் எழுத்தாளர் எப்படி ஒரு பெண் பாத்திரத்தை இந்த அளவுக்கு எழுத முடியும் என்று இன்றும் பலரும் வியந்து கொண்டிருக்கிறார்கள். சேலம் அஜந்தா புக் சென்டர்-இல் இதை வாங்கியபோது, இன்றும் இந்த புத்தகத்திற்கு நிறைய கிராக்கி இருப்பதாக கேள்விப்பட்டு வியந்தேன்.

20. கி. மு கி. பி - மதன்

கற்கால மனிதன் முதல் சந்திரகுப்தா/சாணக்யா வரை உள்ள வரலாற்றை  மதன் மீண்டும் 200 பக்கங்களுக்குள் ஸ்வாரசியம் குறையாமல் கூறி இருக்கிறார். வரலாற்று ரசிகர்கள் தவற விடக்கூடாத புத்தகம்.

21. துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்-இன் கட்டுரைத் தொகுப்பு. அவரின் வினோதமான அனுபவங்கள், அந்நியர்களிடம் அவர் காட்டும் நம்பிக்கை, தனக்கு பாராட்டுக்கடிதம் எழுதியவனை நேரில் சென்று சந்தித்தது போலவே தனக்கு கொலை மிரட்டல் கடிதம் எழுதியவனையும்  நேரில் சென்று பார்த்து நட்பு பாராட்டிக்கொள்வது , கழுதையை பார்ப்பதற்கு சென்னை முழுக்க தன் மகனுடன் அலைவது என்று புத்தகம் முழுவதும் வியக்க வைக்கும் அனுபவங்கள். என்னை பயணம் செய்யவும், அந்நியர்களிடம் பேசவும் தூண்டிய புத்தகம். இன்னும் நான் பேசவில்லை என்பது என் இயலாமை :(


22. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா

ஆர். கே. நாராயன்-இன் மால்குடி கதைகள் போல சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து சிறுகதைகள். அந்த சிறு நகரில் சிறுவனாய் அவர் பார்த்த மனிதர்கள், பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட்டு, எதிர் வீட்டு பெண்கள், என்று நம்மை நம் பள்ளி காலத்திற்கு இழுத்துச் செல்லும் கதைகள்.

23. மனிதனும் மர்மங்களும் - மதன்

வரலாறை போலவே, இந்த புத்தகத்தில் மனிதனுக்கு புரிபடாத, மர்மமான ஆவிகள், வேற்று கிரஹ வாசிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் என்று நான் கேள்விப்படாத பல மனிதர்கள், நிகழ்வுகள் பற்றி மதன் அவருடைய நடையில் விவரித்துள்ளார்.

2020-இல் மேலும் பல புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று எத்தனித்துள்ளேன். நீங்கள் படித்தவை மற்றும் பிடித்தவை பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய புத்தக அலமாரியில் இடம் ஒதுக்கிக் கொள்கிறேன்.